காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வலியுறுத்தி வாகனங்களை நிறுத்தி சுங்கச்சாவடி முற்றுகை: மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பு, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி நேற்று வெளியிட்ட அறிக்கை: நாமக்கல்லில் கடந்த 6ம் தேதி நடந்த தென்மாநில மோட்டார் போக்குவரத்து சங்க செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுச் செயலாளர் சண்முகப்பா வருகிற 18ம் தேதி காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வலியுறுத்தி குஜராத்தில் உள்ள சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாகவும் லாரி உரிமையாளர்கள் கலந்துகொள்ள வேண்டுமென்று அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்தில் இயங்குகின்ற 48 சுங்கச்சாவடிகளில் 23 சுங்கச்சாவடிகள் அகற்றப்பட வேண்டும் என்று தமிழக அரசு ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், இதுவரை தமிழகத்தில் காலாவதியான 8 சுங்கச்சாவடிகள் கூட அகற்றப்படவில்லை.

தமிழகத்தில் இயங்குகின்ற அனைத்து லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளும் நமக்குள் இருக்கும் மனமாச்சரியங்களை மறந்து ஒன்றுபட்டு தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்ற வலியுறுத்தி ஒன்றிய, மாநில அரசை கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இயங்குகின்ற சுங்கச்சாவடிகளில் அந்தந்த மாவட்டங்களில் இயங்கும் ஆயிரக்கணக்கான லாரிகளையும், இதர வாகனங்களையும் நிறுத்தி சுங்கச்சாவடிகளை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றி பெற்று வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

Related Stories: