ராமஜெயம் கொலை வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் 8 ரவுடிகள் ஆஜர்: விசாரணை 14ம் தேதிக்கு ஒத்திவைப்பு

திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக திருச்சி நீதிமன்றத்தில் 8 ரவுடிகள் நேற்று ஆஜராகினர். இந்த வழக்கு விசாரணை 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. திமுக முதன்மை செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த 2012 மார்ச் 29ம்தேதி மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து வருகின்றனர். 1400க்கும் அதிகமான நபர்களிடம் சிறப்பு புலனாய்வுக்குழுவினர் விசாரணை நடத்தினர். இதில் சந்தேகத்துக்குரிய 20 ரவுடிகளிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டது. இவர்களில் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 1ம் தேதி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் 13 ரவுடிகள் ஆஜராகினர். அப்போது 13 பேரும், உண்மை கண்டறியும் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வழக்கு விசாரணை நவ.7ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது 8 ரவுடிகள் 6வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் ஆஜராகினர். தொடர்ந்து, நீதிபதியிடம், எஸ்.பி. ஜெயக்குமார் ஆஜராகி ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி தருமாறு மனு தாக்கல் செய்தார். அவர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், உண்மை கண்டறியும் சோதனையை மருத்துவர்கள் மற்றும் வக்கீல்கள் முன்னிலையில் நடத்த வேண்டும் என கோரினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விசாரணையை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related Stories: