ஒரே நேரத்தில் 2 பட்டப் படிப்புகளை மாணவர்கள் படிக்க 49 வெளிநாட்டு பல்கலையுடன் ஒப்பந்தம்: யுஜிசி தலைவர் தகவல்

புதுடெல்லி: இந்திய மாணவர்கள் ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகளை படிக்க வசதியாக 49 வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட உள்ளதாக யுஜிசி தலைவர் ஜெகதேஷ் குமார் தெரிவித்தார். புதிய தேசிய கல்விக் கொள்கையில் (என்இபி) அறிவித்துள்ளதன் அடிப்படையிலும், பன்முகத் திறனை மாணவர்கள் பெற அனுமதிக்கும் வகையிலும் ஒரே நேரத்தில் 2 முழு நேர பட்டப் படிப்புகளை மாணவர்கள் மேற்கொள்ள பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அனுமதி அளித்துள்ளது.

ஒரே நேரத்திலான 2 பட்டப் படிப்புகளை, மாணவர்கள் 3 வழிமுறைகளில் மேற்கொள்ள முடியும். முதலாவதாக, ஒரே நேரத்தில் 2 பட்டப் படிப்புகளையும் நேரடி முறையில் கல்லூரிகளுக்குச் சென்று மேற்கொள்ளலாம். ஆனால், 2 பட்டப் படிப்பு களுக்கான வகுப்பு நேரம் மாறுபட்டு இருக்கவேண்டும். அடுத்ததாக, ஒரு பட்டப் படிப்பை நேரடி முறையிலும் மற்றொன்றை இணைய வழி அல்லது தொலைதூர வழியிலும் மேற்கொள்ள முடியும்.

மூன்றாவதாக, 2 பட்டப் படிப்புகள் வரை இணைய வழி அல்லது தொலைதூர வழியில் மேற்கொள்ள முடியும். யுஜிசி-யின் இந்த புதிய நடைமுறையை ஏற்பது என்பது பல்கலைக்கழகங்களின் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையிலானது என்று அறிவிக்கப்பட்டது. மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (சியுஇடி) அல்லது அந்தந்த கல்வி நிறுவனங்களின் சேர்க்கை நடைமுறைகளின் அடிப்படையில், இந்த இரட்டை பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதற்காக வெளிநாட்டு பல்கலைக்கழங்களுடன் பல்கலைக்கழக மானியக் குழு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகள் திட்டமானது, இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் முனைவர் (டாக்டர்) பட்டத்துக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) தலைவர் ஜெகதேஷ் குமார் கூறுகையில், ‘இந்திய பல்கலைக்கழகங்களுடன் 49 வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் கல்வி ரீதியாக ஒத்துழைக்க விருப்பம் தெரிவித்துள்ளன. இவற்றில் பல பல்கலைக்கழகங்கள் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களைத் தயாரித்து வருகின்றன.

இந்த செயல்முறைகள் யாவும் அந்தந்த பல்கலைக்கழக குழுவின் விதிகளுக்கு உட்பட்டவை ஆகும். வெளிநாட்டு பல்கலைக்கழக பட்டியலில், மிச்சிகன் ஸ்டேட் பல்கலைக்கழகம், சிட்னி பல்கலைக்கழகம், மெல்போர்ன் பல்கலைக்கழகம், ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியாவின் நியூகேஸில் பல்கலைக்கழகம், பர்மிங்காம் பல்கலைக்கழகம், லண்டனின் குயின் மேரி பல்கலைக்கழகம், இல்லினாய்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி உள்ளிட்டவை அடங்கும்’ என்றார்.

Related Stories: