மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இருக்காது: திருமாவளவன் பேட்டி

சென்னை: மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டால், ஆர்எஸ்எஸ் அமைப்பே இந்தியாவில் இருக்காது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறினார். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், விசிக சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ஆயிரம் பேருக்கு மனுஸ்மிருதி புத்தகத்தை நேற்று இலவசமாக வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதன்பிறகு நிருபர்களிடம் திருமாவளவன் பேசுகையில், ‘‘ தமிழகம் முழுவதும் நேற்று 1 லட்சம் பேருக்கு விலை இல்லாமல் மனுஸ்மிருதி புத்தகம் வழங்கப்பட்டு வருகிறது. மனுஸ்மருதி என்பது இந்துக்களின் வேத நூலாகவும் வழிகாட்டு நூலாகவும் உள்ளது. ஆர்எஸ்எஸ்சின் கொள்கை மனுஸ்மிருதி புத்தகத்தை அடிப்படையாக கொண்டதுதான். எனவே ஆர்எஸ்எஸ்சின் வழிகாட்டுதலை மக்களுக்கு வெளிக்கொண்டு வர இந்த புத்தகம் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆர்எஸ்எஸ். அமைப்பு இதனை தங்களது கலாச்சார கொள்கையாக ஏற்றுக்கொண்டு நடந்து வருகிறது. சமூக நீதி சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம் கூடாது என்பதுதான் மனுஸ்மிருதியின் கருத்து. அதை அடிப்படை கொள்கையாக கொண்டுள்ள இயக்கம் தான் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜ. ஆர்எஸ்எஸ் ஏன் தனியாக பேரணி நடத்த வேண்டும். இந்து மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய நிலையில் மனுஸ்மிருதி புத்தகத்தை விலையில்லாமல் வழங்கி வருகின்றோம்.

ஆர்எஸ்எஸ். அமைப்பின் அரசியல் பிரிவு தான் பாஜ. உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் இன்று ஓட்டம் எடுத்து இருக்கிறார்கள். ஆர்எஸ்எஸ் காலூன்றினால் தமிழகத்தில் மதவெறி அதிகம் ஏற்படும். ஆர்எஸ்எஸ் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டால் இந்தியாவிலேயே ஆர்எஸ்எஸ் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: