உலக பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் திருவள்ளூர் மாணவி தங்கம் வென்றார்

சென்னை: உலக பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் வரலாற்றில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவி ‘தங்க மங்கை’ யாக வலம் வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பானில் நடைபெற்ற இந்த போட்டியில் ஒற்றையர் பிரிவில் மனிஷா ராமதாஸ் ஜப்பானின் ‘மமிகோ டொயோடா’ வை 21-15, 21-15 என்ற நேர்செட் கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றார்.

இதே தொடரில் இரட்டையர்  பிரிவிலும், கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்தியாவிற்கு வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் வெற்றிகளைக் குவித்து வருவதன் மூலம், மனிஷா ராமதாஸ், எஸ்யு 3 மற்றும் எஸ்யு 5 டபுள்யு உலக தரவரிசையில் சாம்பியனாக முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

மேலும் மனிஷா ராமதாஸ் தனது ஒரு வருட சர்வதேச வாழ்க்கையில் ஸ்பெயின், பிரேசில், பஹ்ரைன், துபாய், கனடா, ஜப்பான் என பல்வேறு நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் இருந்து, 8 தங்கம், 1 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பெற்றோர், பயிற்சியாளர்கள் மற்றும் பள்ளியின் துணையுடன் வளர்ந்து  வரும் பாரா பேட்மிண்டன் ‘தங்க மகள்‘ மனிஷா ராமதாஸ் இந்திய தேசத்திற்கும், தாய்த் தமிழ்நாட்டிற்கும், திருவள்ளூர் நகருக்கும் பெருமதிப்பையும் உற்சாகத்தையும் வழங்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்தியாவின் தங்க மங்கை மனிஷா ராமதாஸூக்கு பள்ளியின் நிறுவனத் தலைவர் எ.பன்னீர்செல்வம், தாளாளர் ப.விஷ்ணுசரண், இயக்குனர் பரணிதரன் மற்றும் முதல்வர், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: