சின்னசேலம் கலவரத்தின்போது 275 பவுன், ரூ.30 லட்சம் கொள்ளை: சிறப்பு புலனாய்வு போலீஸ் விசாரணை

சின்னசேலம்: சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி பள்ளியில் நடந்த கலவரத்தின் போது பல லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை போனது குறித்து சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி பள்ளி விடுதியில் தங்கி படித்த பிளஸ்டூ மாணவி மதி கடந்த ஜூலை 13ம் தேதி அதிகாலை இறந்து கிடந்தார்.

இதுகுறித்து சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாணவியின் பெற்றோர், பொதுமக்கள் சிபிசிஐடி விசாரணை கோரி போராட்டம் நடத்தினர். ஜூலை 17ம் தேதி நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. அப்போது வன்முறையாளர்கள் போலீஸ் வேன், சக்தி பள்ளி பஸ்கள், பள்ளி ரெக்கார்டுகள் உள்ளிட்டவற்றை எரித்து சேதப்படுத்தினர். மேலும் பள்ளி உரிமையாளர் தங்கியிருந்த வீட்டுக்குள் புகுந்து பல லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இந்நிலையில் கலவரம் நடந்த ஒரு வாரத்திலேயே எலவடி கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் பள்ளி வளாகத்தில் எடுத்ததாக 7 பவுன் நகையை சின்னசேலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் 27ம் தேதி சக்தி பள்ளியின் உரிமையாளர் ரவிக்குமார் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. பகலவன் மற்றும் சிறப்பு புலனாய்வு போலீசாரிடம், நான் தங்கியிருந்த வீட்டில் இருந்து கலவரத்தின் போது 275 பவுன் நகை மற்றும் ரூ.30 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுவிட்டனர் என்று புகார் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, சிறப்பு புலனாய்வு போலீசார் கலவரத்தின் போது கிடைத்த சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: