திருப்போரூரில் உள்ள ரூ.10 கோடி மதிப்பிலான 7 ஏக்கர் நிலம் ராஜபாளையத்தில் பதிவு பதிவுத்துறை உதவியாளர் சஸ்பெண்ட்

சென்னை: திருப்போரூரில் இருந்த ரூ.10 கோடி மதிப்பிலான 7 ஏக்கர் நிலத்தை ராஜபாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடாக பதிவு செய்த உதவியாளர் சஸ்பெண்ட் செய்து மதுரை மண்டல பொறுப்பு டிஐஜி ரவீந்திரநாத் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் சார்பதிவாளர் அலுவலகம் மூலம் கடந்த 2018ம் ஆண்டு முதல் மாநில முழுவதும் எங்கிருந்து வேண்டுமானாலும் பத்திரப்பதிவு செய்யும் நடைமுறை அமுலுக்கு வந்தது. இதன்மூலம் சென்னையில் உள்ள ஒரு சொத்தினை வேறு எந்த சார்பதிவு அலுவலகத்திலும் பதிவு செய்ய முடியும். ஆனால் அவ்வாறு பத்திரப்பதிவு செய்யப்படும் பட்சத்தில் அந்த சொத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதைப்போன்று அந்த அலுவலகத்தில் தான் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களையும் பெறமுடியும். ஆனால் கடந்த காலங்களில் பத்திரப்பதிவில் பல்வேறு முறைகேடுகள் நடந்திப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக சொத்துக்கு சம்பந்த மில்லாத சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து பத்திரத்தை பெற்று சென்றுள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை மாநில முழுவதும் உள்ள 575 சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவான ஆவணங்களை சிறப்பு தணிக்கை செய்ய பதிவுத்துறை ஐஜி சிவனருள் உத்தரவிட்டிருந்தார். இந்த தணிக்கையின் போது திருப்போரூரில் உள்ள தனியார்க்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான 7 ஏக்கர் நிலத்தை ராஜபாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ராஜபாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அன்றைய தினம் பொறுப்பு சார்பதிவாளராக இருந்த உதவியாளர் அர்ச்சுணன் முறைகேடாக பத்திரப்பதிவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து ராஜபாளையம் சார்பதிவாளர் அலுவலகம், உதவியாளர் அர்ச்சுணனை சஸ்பெண்ட் செய்து மதுரை மண்டல பொறுப்பு டிஐஜி ரவீந்திரநாத் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: