டெல்டாவில் கொட்டி தீர்த்த கனமழை; 50,000 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியது: விவசாயிகள் கவலை

திருச்சி: டெல்டா மாவட்டங்களில் கொட்டி தீபெய்து வரும் மழை காரணமாக 50,000 ஏக்கர் சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், டெல்டா மாவட்டங்களில் 3வது நாளாக கனமழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியில் திருக்கடையூர், பிள்ளைபெருமாநல்லூர், டிமணல்மேடு, கிள்ளியூர், கிடங்கல், மாமாகுடி, மருதம்பள்ளம், காலமநல்லூர், வேப்பஞ்சேரி, தில்லையாடி, திருவிடைகழி, காட்டுச்சேரி, திருக்களாச்சேரி, எடுத்துகட்டி, நல்லாடை, திருவிளையாட்டம், ஈச்சங்குடி, உள்ளிட்ட பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டிருந்தது. அதில், 5 ஆயிரம் ஏக்கர் பரப்பில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு மூலம் சாகுபடி செய்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த சிலதினங்களாக இந்த பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் திருக்கடையூர், காழியப்பநல்லூர், கிள்ளியூர், கண்ணாங்குடி, பிள்ளைபெருமாநல்லூர், மாமாகுடி, மருதமங்களம், நல்லாடை, தில்லையாடி, திருவிடைகழி உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யபட்ட 10 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.

இதே போல் சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொண்டல், திட்டை, தில்லைவிடங்கன், கதிராமங்கலம், விளந்திட சமுத்திரம், அகனி, ஆதமங்கலம், பெருமங்கலம் உள்ளிட்ட ஊராட்சியில் தாழ்வான பகுதிகளில் நடவு செய்யப்பட்ட 20ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளது. கொள்ளிடம் பகுதியில் உள்ள அனைத்து வாய்க்கால்களிலும் தண்ணீர் நிரம்பி விட்டதால் கடல் சீற்றம் காரணமாக தண்ணீர் வடிய தாமதமாகி வருவதால் கொள்ளிடம் ஒன்றியத்தில் 20ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

சீர்காழி அருகே நாட்டுக்கன்னி மணி ஆற்றின் கரை திடீரென உடைந்ததால் ஆற்றில் செல்லும் வெள்ளநீர் அருகே இருந்த 500 ஏக்கர் விளை நிலத்தில் தண்ணீர் புகுந்தது. இதேபோல் தென்னாம்பட்டினம் ஊராட்சியில் கடல் நீர் ஆற்றின் வழியாக 300 ஏக்கர் விளைநிலங்களுக்குள் புகுந்தது. சின்ன பெருந்தோட்டம் கிராமத்தில் 750 ஏக்கர் விளை நிலங்களில் கடல் நீர் புகுந்ததால் விளைநிலங்கள் கடல் போல் காட்சி அளிக்கின்றன. மழை விட்டால்தான் நெற்பயிர்களை காப்பாற்ற முடியும் என்றும், தொடர்ந்து மழை பெய்தால் தண்ணீர் வடியாமல் நீரில் மூழ்கிய பயிர்கள் அழுகி விடும் என்றும்விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மீனவர் சுனாமி குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது. இதன் காரணமாக மீனவர்கள் தங்கள் குடியிருப்பில் இருந்து வெளியே வருவதற்கு மிகவும் சிரமப்பட்டனர். திருமுல்லைவாசல், தொடுவாய், பழையாறு, பூம்புகார் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்களுடைய விசைப்படகுகள், பைபர் படகுகள், கட்டு மரங்கள் உள்ளிட்டவைகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கொற்கை ஊராட்சி தலைக்காடு கீழத்தெருவை சேரந்த நாகூரான் என்பவரின் தொகுப்பு வீடு நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிய அவரது மனைவி ராஜகுமாரி(50), மகன் வீரசெல்வம்(24) ஆகியோர் படுகாயமடைந்தார். அவர்கள் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை விடப்பட்டு இருந்தது.

Related Stories: