திருவொற்றியூர் பகுதியில் கொட்டும் மழையில் களப்பணியில் ஈடுபட்ட பெண் கவுன்சிலர்கள்: பொதுமக்கள் பாராட்டு

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் ஆண் கவுன்சிலர்களுக்கு இணையாக, களப்பணியில் ஈடுபட்ட பெண் கவுன்சிலர்களை  பொதுமக்கள் பாராட்டினர். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததையொட்டி தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், திருவொற்றியூர் மண்டலத்தில் தாழ்வாக உள்ள தெருக்கள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இவ்வாறு தேங்கியுள்ள மழைநீரை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தற்காலிக கால்வாய்களை வெட்டி, ராட்சத மோட்டார் மூலம் வெளியேற்றி வருவதால் மழைநீர் வடிந்து விடுகிறது.

இந்த மழைநீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி அதிகாரிகளோடு கவுன்சிலர்கள் மற்றும் திமுக தொண்டர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரும் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவொற்றியூர் மண்டலத்தில் 2வது வார்டு கவுன்சிலர் கோமதி சந்தோஷ், 8வது வார்டு கவுன்சிலர் ராஜகுமாரி விஜயன், 9வது வார்டு கவுன்சிலர் உமா சரவணன், 11வது வார்டு கவுன்சிலர் சரண்யா கலைவாணன், 13வது வார்டு கவுன்சிலர் சுசிலா ராஜா, 14வது வார்டு கவுன்சிலர் பானுமதி சந்தர் ஆகிய கவுன்சிலர்களும் தங்களது வார்டில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் நேரடியாக ஈடுபட்டு வருகின்றனர்.

கொட்டும் மழையிலும் ரெயின்கோட் அணிந்து கொண்டு மாநகராட்சி ஊழியர்கள் மூலம் மழைநீரை அப்புறப்படுத்துவது, கால்வாய்களில் மழைநீர் போகக்கூடிய பாதையில் உள்ள அடைப்புகளை சரி செய்வது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவம் போன்ற உதவிகளை தீவிரமாக செய்து வருகின்றனர். இவ்வாறு ஆண் கவுன்சிலருக்கு நிகராக பெண் கவுன்சிலர்களும் உடல் உபாதைகளை பொருட்படுத்தாமல் இந்த மழைக்காலத்தில் களப்பணி ஆற்றுவது பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.

Related Stories: