கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் குடியிருப்பு, சாலைகளில் மழைநீர் அகற்றும் பணி தீவிரம்: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ ஆய்வு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள குடியிருப்புகள் மற்றும் சாலைகளை நேற்று டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ ஆய்வு செய்தார். பின்னர் அப்பகுதிகளில் ஜெசிபி இயந்திரம் மூலமாக மழைநீரை அகற்றும் பணிகளை துரிதப்படுத்தினார். கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி ஒன்றியம், எல்லாபுரம் ஒன்றியம், ஊத்துக்கோட்டை பேரூராட்சி, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பகுதிகளில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாய மக்கள் வசிக்கின்றனர்.

இதற்கிடையே கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால், மேற்கண்ட பகுதிகளில் உள்ள கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, விவசாய நிலங்கள், குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது. இதனால் நெற்பயிர்கள் சேதமாகின. இதுகுறித்து தகவலறிந்ததும் மழையினால் பாதிக்கப்பட்ட ஊத்துக்கோட்டை, எல்லாபுரம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ நேரில் ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை ஜெசிபி இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணிகளை தீவிரப்படுத்தினார்.

இந்நிலையில், கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட ரெட்டம்பேடு நெடுஞ்சாலை, கோட்டக்கரை குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை நேற்று டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர் ஜெசிபி இயந்திரங்கள் மூலமாக அப்பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் கால்வாய்கள் வெட்டி அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, அங்கு மழைநீர் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன.இதேபோல் கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் இருபுறமும் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது.

இதன் மத்தியில் புறக்காவல் நிலையம் நடுவே இடத்தை இடித்து, மின்வாரிய அலுவலகம் வழியாக கால்வாயில் மழைநீர் செல்லவும், மற்றொரு இடமான பேரூராட்சி அலுவலகம் எதிரே கால்வாய் அமைத்து திரவுபதி அம்மன் கோயில் வழியாக கால்வாய் அமைத்து மழைநீர் கால்வாய் செல்லும் வகையில், மழைக்காலம் முடிந்ததும் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ உத்தரவிட்டார். இந்த ஆய்வில் பேரூராட்சி அலுவலர் யமுனா, நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் சந்திரசேகர், பொதுப்பணித்துறை கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுதேவன், செல்வகுமார், திமுக மாவட்ட பொருளாளர் ராகவரெட்டிமேடு ரமேஷ், ஒன்றிய செயலாளர் பரிமளம், நகர செயலாளர் அறிவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: