அவல் பூந்துறையில் வீட்டில் பதுக்கிய 22 கிலோ கஞ்சா பறிமுதல்-2 வாலிபர்களிடம் விசாரணை

மொடக்குறிச்சி : அவல்பூந்துறை அருகே ராசாம்பாளையத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக  இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே உள்ள ராசாம்பாளையத்தில் வீட்டில் கஞ்சா குடோன் செயல்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று மொடக்குறிச்சி இன்ஸ்பெக்டர் தீபா, அரச்சலூர் இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது ராசாம்பாளையம் செல்லும் வழியில் பைக்கில் சென்ற இருவர் போலீசைக் கண்டதும் பைக்கை போட்டு விட்டு ஓடினர்.

 இதில், ஈரோட்டைச் சேர்ந்த அஜீத் (22) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது, ராசாம்பாளையத்தில் உள்ள பாலா (29) என்பவரின் வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ராசாம்பாளையத்தில் உள்ள பாலாவின் வீட்டிற்கு சென்ற போலீசார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெருந்துறை ஏஎஸ்பி கெளதம்கோயல் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.இதில், அரச்சலூர் அருகே உள்ள அனுமன்பள்ளியைச் சேர்ந்தவர் பாலா (29) டிப்பர் லாரி டிரைவர்.

இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் கால் முறிவு ஏற்பட்டதையடுத்து சிகிச்சை பெற்று தற்போது அவல்பூந்துறை அடுத்த ராசாம்பாளையத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். முகாசி அனுமன்பள்ளியைச் சேர்ந்த கணேசன் என்பவர் சென்னையில் வேலை செய்து கொண்டிருப்பதாகவும் அவரது நண்பர்கள் மூலம் ஈரோட்டில் இருந்து கஞ்சா பொட்டலங்கள் அடங்கிய பேக்குகளை கொண்டு வந்து வைத்து விட்டு ஒவ்வொருவராக வந்து தேவையான கஞ்சாவை விற்பனைக்கு எடுத்து செல்வதும், இதற்காக கணேசன் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை பாலாவுக்கு கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.

இங்கிருந்து மொடக்குறிச்சி, அரச்சலூர், அவல்பூந்துறை, லக்காபுரம், 46புதூர் என சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனைக்கு எடுத்து சென்று வந்துள்ளது தெரியவந்தது. இந்நிலையில், 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் பிடித்து அரச்சலூர் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும், கஞ்சா விற்பனை கும்பலின் முக்கிய நபரான கணேசன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். கணேசனை பிடித்து விசாரித்தால் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்?, யார்? என்பது குறித்து தெரியவரும்.

Related Stories: