தமிழகத்தில் 4 நாட்கள் மழை நீடிக்க வாய்ப்பு தேசிய, தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை வீரர்கள் 2,048 பேர் தயார்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளதால், தேசிய பேரிடர் மீட்பு படையினர் 1,149 பேரும், தமிழ்நாடு  பேரிடர் மீட்பு படையினர் 899 பேரும் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறினார். தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நேற்று சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் கடந்த 2ம் தேதி (நேற்று முன்தினம்) 38 மாவட்டங்களில் 18.01 மி.மீ. மழை பெய்துள்ளது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் மிக அதிக மழை 116.08 மி.மீ. பெய்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் 220 மி.மீ. அதி கன மழை பெய்துள்ளது.

நேற்று முன்தினம் சென்னையில் 22.35 மி.மீ. மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் பெய்த கனமழையின் காரணமாக தேனி மாவட்டத்தில் சுவர் இடிந்ததில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். 16 கால்நடைகள் இறந்துள்ளது. 52 குடிசைகள் / வீடுகள் சேதமடைந்துள்ளன. உயிரிழப்புக்கு உடனடியாக நிவாரண தொகை ₹4 லட்சம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிக்கு மட்டும் 17 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களுக்கு மொத்தம் 37 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மழைநீரை வெளியேற்ற 536 நீர் இறைப்பான்கள் தயாராக உள்ள நிலையில், 278 இடங்களில் மழைநீரை வெளியேற்ற 340 பம்புகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 191 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 6 நிவாரண மையங்களில் 283 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை நீர் தேங்கியுள்ளதால் பாதிப்புகுள்ளான 15 பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 55,500 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு மழை பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், தேசிய பேரிடர் மீட்பு படையினர் 1,149 பேரும், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 899 பேரும் தயார் நிலையில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: