தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக் கோரி திமுக, கூட்டணி கட்சி எம்பிக்கள் கையெழுத்து: குடியரசு தலைவரை சந்தித்து வழங்க முடிவு

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக் கோரி திமுக, கூட்டணி கட்சி எம்பிக்கள் கையெழுத்திட்டுள்ளனர். இந்த கையெழுத்து படிவங்கள் விரைவில் குடியரசு தலைவரை சந்தித்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பல்வேறு கருத்துகளுக்கு திமுக மற்றும்  அதன் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகப் பேசி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் கூட்டாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிக்கை வெளியிட்டனர். திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் இந்த அறிக்கை ஆளுநருக்கு கடும் அழுத்தத்தை கொடுத்தது.

இதைத் தொடர்ந்து ஆளுநரை திரும்ப பெற கோரி குடியரசு தலைவரிடம் முறையிட திமுக திட்டமிட்டது. இதன்படி திமுக மற்றும் கூட்டணி கட்சி  எம்.பி.க்களுக்கு திமுகவின் பொருளாளரும், திமுக நாடாளுமன்ற  குழு தலைவருமான டி.ஆர்.பாலு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், ‘ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்’ என்று வலியுறுத்தி  ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து மனு அளிக்க முடிவு  செய்யப்பட்டுள்ளது.

திமுக எம்பிக்கள் மற்றும் திமுகவுடன் ஒருமித்த  கருத்து கொண்டுள்ள அரசியல் கட்சிகளின் எம்பிக்கள் அனைவரும்  திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு வந்து குறிப்பானையில் கையெழுத்திட வேண்டும். 3ம் தேதிக்கு(நேற்று) முன்பாக மனுவை  படித்து பார்த்து கையெழுத்திட வேண்டும்’ என்றும் அந்த கடிதத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து திமுக எம்பிக்கள் மற்றும் வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் அனைத்து எம்பிக்களும் சென்னை அண்ணா அறிவாலயம் வந்து கையெழுத்திட்டனர். நேற்று திருநாவுக்கரசர், விஜய் வசந்த், விஷ்ணு பிரசாத் உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் அண்ணா அறிவாலயம் வந்து கையெழுத்திட்டனர். மேலும் வரமுடியாத எம்பிக்கள் கையெழுத்திட்ட படிவத்தை தங்கள் பிரதிநிதிகள் சார்பில் கொடுத்து அனுப்பினர். எம்பிக்களின் கையெழுத்திட்ட படிவங்கள் அனைத்தும் விரைவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து வழங்க திமுக திட்டமிட்டுள்ளது.

Related Stories: