சிவகாசியில் பல்லாண்டு பிரச்னைக்கு தீர்வு; கனமழையிலும் தண்ணீர் தேங்காத சாலைகள்: மாநகராட்சி நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு

சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் வாறுகால் தூர்வாரும் பணிகளில் மாநகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டதால் கடந்த 10 ஆண்டுகளுக்கு பின்னர் பிகேஎஸ்ஏ சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்காமல் வழிந்தோடியது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. சிவகாசி மாநகராட்சி 34வது வார்டு பிகேஎஸ்ஏ ஆறுமுகம் ரோட்டில் உள்ள அம்மன்ேகாவில் பட்டி தெரு, வானக்கார தெரு, தங்கையா நாடார் தெரு வீடுகளின் கழிவு நீர் பிகேஎஸ்ஏ ரோட்டில் உள்ள வாறுகாலில் சென்று கிருதுமால் ஓடையில் கலக்கிறது. இந்த பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இந்நிலையில் பிகேஎஸ்ஏ சாலை வாறுகால் கடந்த பல ஆண்டுகளாக தூர் வாரப்படவில்லை. வாறுகாலை சிலர் ஆக்கிரமிப்பு ெசய்து கட்டிடங்கள் கட்டியிருந்தனர். வாறுகால் கடந்த பல வருடங்களாக தூர் வாரப்படாததால் அதிக அளவில் மண் மேவிக்கிடந்தது. மழைக் காலங்களில் வாறுகால் நிரம்பி சாலையில் தண்ணீர் கழிவுநீருடன் கலந்து பெருக்கெடுத்து ஓடியது. கழிவு நீருடன், மழை நீர் சேர்ந்து சாலையில் தேங்கி நின்றதால் கடும் சுகாதாரக்கேடு ஏற்பட்டது.

இதே போல் மருதநாடார் ஊரணியில் இருந்து பொத்துமரத்து ஊரணி செல்லும் வாறுகாலும் மண் மேவிக்கிடந்தது. பெரியகருப்பண் தெரு, ஞானகிரி ரோடு, சோலைகாலனி, உசேன் காலனி பகுதிகளின் கழிவு நீர் மருதநாடார் ஊரணியில் இருந்து பொத்துமரத்து ஊரணி செல்லும் கால்வாயில் தேங்கிக்கிடந்தது. இதனால் மழைக்காலங்களில் ரோட்டில் தேங்கி நிற்கும் அவலநிலை தொடந்தது. சிவகாசி பகுதியில் லேசானமழை பெய்தாலே பிகேஎஸ்ஏ ஆறுமுகம் ரோட்டில் முழங்கால் அளவு மழை நீர் கழிவு நீருடன் தேங்கி நிற்கும்.

இதனால் மண் அரிப்பு ஏற்பட்டு சாலை குண்டும், குழியுமாக இருந்தது. பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் சாலையில் ெசல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் ஆபத்தும் அதிகம் இருந்தது. இந்நிலையில் மாநராட்சி மேயராக சங்கீதா இன்பம் பொறுப்பேற்றவுடன் பிகேஎஸ்ஏ ஆறுமுகம் ரோட்டில் உள்ள வாறுகாலில் மண் மேடுகளை அற்றவும், மாநகராட்சி பகுதியில் மழை நீர் தேங்கும் இடங்கள் முழுவதும் வாறுகால் தூர்வாரும் பணிகளை தீவிரப்படுத்தினார். இதனால் பிகேஎஸ்ஏ சாலைில் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த வாறுகாலில் இருந்த மணலை அகற்றும் பணியில் சுகாதார பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

வாறுகால் மண் மேடுகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. இங்கு வாறுகாலில் புதைந்து கிடந்த மண் 150க்கும் மேற்பட்ட லாரி லோடுகளாக அள்ளப்பட்டது. வாறுகால் மண் அகற்றும் பணியின்போது ஆக்கிரமிப்புகளும் சேர்த்து அகற்றப்பட்டன. இதனால் பிகேஎஸ்ஏ ஆறுமுகம் சாலையில் மழை காலங்களில் மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் சிவகாசியில் பலத்த மழை பெய்தது. இந்த மழைக்கு மாநகர் பகுதி முழுவதும் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. என்ஆர்கே வீதியில் மழை நீர் தேங்கி சிறிது நேரத்திற்குள் வழிந்தோடியது.

இந்த பகுதியில் முன்பு மழை நீர் மணிக்கணக்கில் சாலையிலேயே தேங்கி நிற்கும். ஆனால் நேற்று முன்தினம் மழை நின்றவுடன் மழை நீர் சிறிது நேரத்திற்குள் வழிந்தோடியது. இதே போல் பிகேஎஸ்ஏ ரோட்டில் மழை நீர் சாலையில் தேங்காமல் உடனடியாக வாறுகாலில் வழிந்தோடியது. கடந்த பல ஆண்டுகளாக இந்த ரோட்டில் மழை நீர் மணிக்கணக்கில் தெப்பம்போல் தேங்கிய நிலையில் நேற்று முன்தினம் இரவு மழை நீர் தேங்காமல் வழிந்தோடியதை பார்த்து அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பிகேஎஸ்ஏ ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் மாநராட்சியின் நடவடிக்கையை பெரிதும் பாராட்டினர்.

Related Stories: