வாழைக்குளம் கண்மாய் நிரம்பியதால் பெரியகுளம் கண்மாய்க்கு தண்ணீர் வந்தது-திருவில்லிபுத்தூர் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

திருவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டத்திலேயே மிகப்பெரிய கண்மாயான திருவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாய்க்கு பாதி அளவிற்கு தண்ணீர் வந்ததால் திருவில்லிபுத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக கடந்த 10 தினங்களுக்கு முன்பு மழை பெய்தது. தொடர்ச்சியாக பகல் மற்றும் இரவு வேளைகளில் மேற்கு தொடர்ச்சி மலை உச்சி பகுதியில் பெய்த மழையின் காரணமாக திருவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் வாழைகுளம் கண்மாய் நிரம்பியது. திருவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள 90 கண்மாய் மற்றும் குளங்களில் முதலில் நிரம்பிய கண்மாய் திருவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் வாழைகுளம் கண்மாய்.

இந்த கண்மாயைப் பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் அமைந்துள்ளதால் மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக உடனடியாக நிரம்பியது. இந்த கண்மாய் நிரம்பியதால் மம்சாபுரம் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். வாழைகுளம் கண்மாயை பொறுத்தவரை சுமார் 700 ஏக்கருக்கு மேல் விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் வாழைகுளம் கண்மாய் நிரம்பி கடந்த சில தினங்களுக்கு முன்பு மறுகால் பாய துவங்கியது. மறுகால் பாய்ந்த இந்த வாழை குளம் கண்மாய் தண்ணீர் நேரடியாக திருவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்டத்திலேயே உள்ள மிகப் பெரிய கண்மாயான பெரியகுளம் கண்மாய்க்கு வந்தது. பெரியகுளம் கண்மாய்க்கு பாதி அளவிற்கு தண்ணீர் வந்துள்ளதால் திருவில்லிபுத்தூர் மற்றும் சுட்டு வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதேபோல் திருவில்லிபுத்தூர் நகர் பகுதி பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பெரியகுளம் கண்மாயைப் பொறுத்தவரை சுமார் 1000 ஏக்கர் அளவிற்கு விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த கண்மாயில் பாதி அளவு தண்ணீர் உள்ளதால் இந்த தண்ணீரை பயன்படுத்திக் கொள்ள விவசாயிகளுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் திருவில்லிபுத்தூர் நகர் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயரும்.

இதனால் திருவில்லிபுத்தூர் நகர் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதுகுறித்து திருவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறும் போது, கடந்த வருடம் தொடர்ச்சியாக பெய்த மழையின் காரணமாக பெரிய குளம் கண்மாய் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் விவசாயம் தடையின்றி நடைபெற்று வந்தது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக வாழை குளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்து பெரியகுளம் கண்மாய்க்கு பாதி அளவு தண்ணீர் வந்துள்ளது.

தொடர்ச்சியாக மழை பெய்தால் பெரியகுளம் கண்மாய் முழு கொள்ளளவை எட்டும் வாய்ப்புள்ளது. தற்போது வடகிழக்கு பருவ மழை துவங்கி உள்ளதால் தொடர்ச்சியாக மழை பெய்து கண்மாய் முழு கொள்ளளவை எட்டும் வாய்ப்புள்ளது. இதனால் விவசாய பணிகள் தங்கு தடையின்றி நடைபெறும் என தெரிவித்தார்.

Related Stories: