வால்பாறையில் ‘ரைஸ்பீர்’ தடை செய்ய வேண்டும்-பகுதி சபை கூட்டத்தில் கோரிக்கை

வால்பாறை : உள்ளாட்சி தினத்தயொட்டி  வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதியில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் வால்பாறை நகராட்சி மிகப்பெரிய பரப்பளவு கொண்ட, 21 வார்டுகள் உள்ள நகராட்சியாகும், 256 சகிமீ. பரப்பளவு கொண்ட நகராட்சியில் ஊராட்சி மற்றும் பேரூராட்சிகள் இல்லை. வால்பாறை நகராட்சியில் நேற்று முன்தினம் நகராட்சி கூட்டம் நடைபெற்ற நிலையில், நேற்று 3 வார்டுகளில் பகுதி சபா  கூட்டம் நடைபெற்றது.

வால்பாறை 14-வது வார்டு: வால்பாறை 14-வது வார்டு சிறுகுன்றா எஸ்டேட்டில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. நகராட்சி தலைவர், மற்றும் அப்பகுதி கவுன்சிலருமான அழகுசுந்தரவள்ளி செல்வம் தலைமையிலும், நகராட்சி ஆணையாளர் பாலு மற்றும் கவுன்சிலர்கள் முன்னிலையில்  கூட்டம் நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய கிராம சபாவில் 4 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.

பகுதி சபாவில்  ‘அதிகநேரம் குடிநீர் விநியோகிக்க வேண்டும். தெருவிளக்கு கூடுதல் அமைக்கவேண்டும், வனவிலங்கு நடமாட்டம் குறித்து அறிந்து கொள்ள சாலையோரம் இடது மற்றும் வலது புறம் 20 அடி வரை வனப்பகுதியில், களை மற்றும் புதர்கள் அகற்றவேண்டும்.வால்பாறை பகுதியில் ஸ்கேன் சென்டர் அமைக்க வேண்டும், அரசு மருத்துவமனை தரம் உயர்த்த வேண்டும், வால்பாறை டோபி காலனி பகுதியில்  பட்டா வழங்க வேண்டும், அபாய மரங்கள் வெட்ட வேண்டும், சிறுகுன்றா எஸ்டேட்டில் வடமாநில தொழிலாளர்கள் ரைஸ் பீர் தயாரித்து அமளியில் ஈடுபடுவதை காவல் துறை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

வால்பாறை 4-வது வார்டு: 4வது வார்டு ஸ்டேன்மோர் எஸ்டேட் எம்.ஜி.ஆர் நகரில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் தலைமை ஏற்றார். நகராட்சி ஆணையாளர் பாலு, அப்பகுதி கவுன்சிலர் ஜே.பி.ஆர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் குடிநீர் வசதி, தெருவிளக்கு, மனமகிழ் மன்ற கட்டிடம், ரேசன் மற்றும் சமையல் எரிவாயு விநியோகம் முறைப்படுத்த வேண்டும், தடுப்பு சுவர், பொது கழிப்பிடம் ஏற்படுத்த வேண்டும் என  அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

வால்பாறை 10-வது வார்டு: வால்பாறை 10வது வார்டு பகுதி சபா  கூட்டம் கவுன்சிலர் காமாட்சி கணேசன் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி மேலாளர் ஜலாலுதீன் முன்னிலை வகித்தார்.

பொதுமக்கள்  பங்கேற்று வால்பாறை விரிவாக்கம், புலிகள் காப்பகத்தில் இருந்து விலக்கு உள்ளிட்ட வால்பாறை டவுன் மேம்பாடு  குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தனர்.

Related Stories: