பள்ளிகொண்டா அருகே பட்டப்பகலில் துணிகரம் டிரைவர் வீட்டில் பூட்டு உடைத்து 3.5 சவரன், ₹1.50 லட்சம் திருட்டு-சிசிடிவி கேமராவில் சிக்கிய 2 பேருக்கு வலை

பள்ளிகொண்டா : பள்ளிகொண்டா அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 3.5 சவரன் நகைகள், ₹1.50 லட்சம் ரொக்கத்தை திருடிச்சென்ற 2 மர்ம ஆசாமிகளை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த சராதிப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் மனோகர்(65). தனியார் பள்ளியில் வேன் டிரைவர். இவரது மனைவி ஆதிலட்சுமி. தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை செய்கிறார். இவர்களது மகன் மோகன்ராஜ். மாற்றுத்திறனாளியான இவர் கரடிகுடி பகுதியில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார்.

மனோகர், அவரது மனைவி மற்றும் மகன் தினமும் காலை 7.30 மணிக்குள் வேலைக்கு சென்றுவிட்டு இரவு தான் வீடு திரும்புவார்களாம்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் அனைவரும் வீடு மற்றும் வெளிப்புற கேட்டை பூட்டி கொண்டு வேலைக்கு சென்றுவிட்டனர். தொடர்ந்து, மாலை 5.30 மணிக்கு மோகன்ராஜ் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது, கேட்டை திறந்து உள்ளே சென்ற மோகன்ராஜ் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

மேலும், உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த 2  பீரோக்களும் திறக்கப்பட்டு அதில் இருந்த துணிமணிகள், பொருட்கள் சிதறிக்கிடந்தது. மேலும், அதிலிருந்த நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

உடனடியாக மோகன்ராஜ் தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தார். அப்போது, வீட்டில் இருந்து 3.5 சவரன் நகைகள், ₹1.50 லட்சம் ரொக்கம் ஆகியன திருட்டு போனது தெரியவந்தது.தொடர்ந்து, மனோகர் குடும்பத்தினர் பள்ளிகொண்டா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, வீட்டின் வெளிப்புற பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்த்தபோது 2 நபர்கள் வீட்டின் காம்பவுன்ட் சுவர் ஏறி குதித்து, கதவின் பூட்டை உடைத்து உள்ளே செல்வது பதிவாகியிருந்தது. தொடர்ந்து, போலீசார் நேற்று காலை மாவட்ட தடவியல் நிபுணர்களை வரவழைத்து வீட்டில் தடயங்களை சேகரித்தனர். மேலும், மனோகர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து பட்டப்பகலில் வீடு புகுந்து கைவரிசை காட்டிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.

சிசிடிவி கேமராவை கவனிக்காத ஆசாமிகள்

பள்ளிகொண்டா அடுத்த சராதிப்பேட்டையில் நேற்று முன்தினம் திருட்டு நடந்த மனோகர் வீட்டின் வெளிப்பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அந்த பதிவுகள் மனோகரின் மகன் மோகன்ராஜின் செல்போனில் 24 மணி நேரமும் வீடியோ தெரியும்படி சாப்ட்வேர் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவத்தின்போது மோகன்ராஜ் கடையில் செல்போன் பழுது பார்க்கும் வேலையில் பிசியாக இருந்துள்ளார்.

மாலை 5 மணியளவில் செல்போனில் சிசிடிவி வீடியோவை பார்த்த மோகன்ராஜ், மர்ம நபர்கள் வீட்டின் சுவர் ஏறி குதித்து கதவு பூட்டை உடைப்பது பார்த்து அதிர்ச்சியடைந்து, உடனடியாக வீடு திரும்பியுள்ளார். பின்னர், சிசிடிவி பதிவு முழுவதும் ஆராய்ந்து பார்த்ததில் திருடர்கள் சிசிடிவி கேமரா இருப்பதை அறியாமல் நகை மற்றும் பணத்தை திருடிக்கொண்டு சென்றது தெரியவந்தது. மேலும், பள்ளிகொண்டா தேசிய  நெடுஞ்சாலைக்கு வரும் வழியில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களிலும் மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் செல்வதும், அவர்களது முகமும் தெளிவாக பதிவாகியுள்ளது. அதன்பேரில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: