கோயம்பேடு பேருந்து நிலைய கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்; அங்காடி நிர்வாக அதிகாரி அதிரடி

அண்ணாநகர்: கோயம்பேடு பேருந்து நிலைய கடைகளில் நடத்திய அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சம்பந்தப்பட்ட கடைகளுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டது. சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்யும் கடைகளை கண்காணிக்க அங்காடி நிர்வாக குழு அமைத்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள், பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தாமல் துணி பைகளை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அங்காடி நிர்வாகம் சார்பில் மஞ்ச பை இயந்திரத்தை அறிமுகப்படுத்தினர். இதனால் மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வாங்க வருகின்றவர்கள் மஞ்ச பை இயந்திரத்தில் ஐந்து ரூபாய் பணம் செலுத்தி பையை எடுத்துக்கொண்டு காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.

 

இந்நிலையில், தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு கோயம்பேடு மார்க்கெட்டில் ஆய்வு செய்தார். அப்போது அனைத்து கடைகளிலும் துணிப்பைகளை வியாபாரிகள் பயன்படுத்துவதை கண்டு ஆச்சரியப்பட்டார். இதையடுத்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் பிளாஸ்டிக் கவர்களை தவிர்த்துவிட்டு, துணி பைகளில் வியாபாரம் செய்வது போல் ஒரு வீடியோ வெளியிட்டு அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் சாந்தியை பாராட்டியிருந்தார். இந்நிலையில், கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து, அங்கு விற்பனை செய்யப்படும் பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்வதற்கு அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் சாந்தியை நியமித்துள்ளனர். இதையடுத்து, அவர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்தார். அப்போது ஒரு கடையில் பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கடைக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கடையின் உரிமையாளரை இனிமேல் பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்யக்கூடாது என்றும் மறுபடி பிளாஸ்டிக் கவர் விற்பனை செய்வதை கண்டுபிடித்தால் கடைக்கு சீல் வைக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். மேலும்,  மற்ற கடைகளின் உரிமையாளர்களிடமும் பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுத்து கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று அதிகாரி சாந்தி எச்சரித்தார்.

Related Stories: