பருவமழைக்கு மின்துறை தயார் சென்னைக்கு 100% மின் விநியோகம்: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மின்துறை தயார் நிலையில் உள்ளது. சென்னை மாநகரில் 100 சதவீதம் மின்விநியோகம் அளிக்கப்பட்டு வருகிறது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை கலைஞர் நகரில் உள்ள துணை மின் நிலையத்தில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு நேற்று மேற்கொண்டார். ஆய்வுக்கு பின் அவர் அளித்த பேட்டி: சென்னையில் 10 துணை மின் நிலையங்களில் 16 மின்மாற்றிகள் ஒரு மீட்டர் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளன. அதேபோல ஃபில்லர் பாக்ஸ்களை பொறுத்தவரை கடந்த ஆண்டு மழைநீர் சூழ்ந்ததால் மின் விநியோகம் நிறுத்தப்பட்ட சூழலை கருத்தில்கொண்டு இந்தாண்டு அதனை சரிசெய்யும் வகையில் 2,700 ஃபில்லர் பாக்ஸ்களும் ஒரு மீட்டர் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

மழைக்காலத்தை பொறுத்தவரை சென்னையில் பகல் நேரங்களில் 1,440 பேரும், இரவு நேரங்களில் 600 பேர் என மின்சாரத்துறை தரப்பில் அதிகாரிகள் மற்றும் மின் ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். சென்னையை பொறுத்தவரை 1,800 பீடர்கள் உள்ளன. அவற்றில் எங்குமே மின் விநியோகம் நிறுத்தப்படவில்லை. 100% மின் விநியோகம்  அனைத்து இடங்களிலும் செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு 2 இடங்களில் மட்டும் மின்விநியோகம் தடைப்பட்டது. அங்கும் 10 நிமிடங்களில் மின்சார பிரச்னை சரி செய்யப்பட்டுவிட்டது.

மேலும், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 18,350 மின் மாற்றிகள், 5 ஆயிரம் கி.மீ அளவுக்கு மின்கடத்திகள், 2 லட்சம் மின் கம்பங்கள் இருப்பில் உள்ளன. எனவே தமிழகத்தில் சீரான மின்விநியோகம் வழங்கப்படுகிறது. மழைக்கு முன்பாக தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் மின் கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. சாய்ந்த நிலையில் இருந்த 31 ஆயிரத்து 500 மின் கம்பங்கள் சரிசெய்யப்பட்டு உள்ளன. மின் கம்பிகளை பொருத்த அளவில் 1,800 கி.மீ அளவுக்கு மாற்றப்பட்டுள்ளன.  சென்னை மட்டுமின்றி மழை பெய்யக்கூடிய மற்ற மாவட்டங்களாக இருந்தாலும், கடலோர மாவட்டங்களாக இருந்தாலும் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை எவ்வித பாதிப்பும் இல்லை. எந்த பாதிப்பு இருந்தாலும் மின்னகம் மூலம் உடனுக்குடன் தகவல் தெரிவிக்கலாம்.

இதுவரை மின்தடை தொடர்பாக பெரிய அளவில் மின்னகத்திற்கு அழைப்புகள் வரவில்லை. அதுவே மின் விநியோகம் சீராக உள்ளதற்கு சான்றாக அமைந்துள்ளது. இருப்பினும், மின்னகத்தில் பொதுமக்களின் பிரச்னைகளை கேட்கும் பணியில் தற்போது 75 பேர் ஈடுபட்டு வருகின்றனர். மின் தேவைக்கு ஏற்ப விநியோகமும் சீராக உள்ளது. நேற்று முன்தினம் 13,170 மெகாவாட் அளவுக்கு மின்தேவை இருந்தது. அதேபோல், வழக்கமாக 14,500 முதல் 16 ஆயிரம் மெகாவாட் வரை மின்தேவை இருக்கும். தற்போது மழைக்காலம் என்பதால் மின் தேவை என்பது குறைந்துள்ளது. மழைக்கு முன்பாக தமிழகம் முழுவதும் 40,000 மின் கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

Related Stories: