பம்மல் மின்வாரிய அலுவலகத்தில் மின்கட்டணம் செலுத்த முடியாமல் நுகர்வோர் மணிக்கணக்கில் தவிப்பு; ஊழியர்கள் பற்றாக்குறையால் தொடரும் அவலம்

பல்லாவரம்: பம்மல் மின்வாரிய அலுவலகத்திற்கு கட்டணம் செலுத்த வரும் நுகர்வோர் போதிய கவுன்டர்கள் இல்லாததாலும், ஊழியர்கள் பற்றாக்குறையாலும் மணிக்கணக்கில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்வாரியத்தின் தாம்பரம் கோட்டத்திற்கு உட்பட்ட பம்மல் உபகோட்ட அலுவலகம் பம்மல், அண்ணா நகர் 9வது தெருவில் உள்ளது. இங்கு பம்மல், அனகாபுத்தூர், பொழிச்சலூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய வீடு, கடை, வணிக நிறுவனங்கள் என சுமார் ஒரு லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. மாதம் ஒன்றிற்கு சராசரியாக ஐம்பதாயிரம் பேர் இந்த அலுவலகத்திற்க நேரடியாக வந்து மின்கட்டணம் செலுத்தி வருகின்றனர். இதன் மூலம் அரசுக்கு சராசரியாக மாதம் தோறும் ஒன்று முதல் ஒன்றரை கோடி ரூபாய் கிடைத்து வருகிறது. கோடை காலத்தில் பொதுமக்கள் ஏசி, மின்விசிறி மற்றும் ஏர் கூலர் ஆகியவற்றை அதிக அளவில் உபயோகிப்பதன் மூலம் அந்த மாதங்களில் மட்டும் கூடுதலான கட்டணம் பொதுமக்களிடம் இருந்து அரசுக்கு செல்கிறது.

இதுதவிர அதிக தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களை உள்ளடக்கிய பகுதி பம்மல் என்பதால், மின்கட்டணம் செலுத்த பம்மல் மின்வாரிய அலுவலகத்தில் காலை முதல் பிற்பகல் வரை தினமும் நுகர்வோர் கூட்டம் நிறைந்து காணப்படும். கடந்த மாதம் வரை பம்மல், அனகாபுத்தூர் மற்றும் பொழிச்சலூர் ஆகிய பகுதிகளில் உள்ள நுகர்வோர் மின் கட்டணத்தை எளிதாக செலுத்தும் வகையில் அந்தந்த பகுதி மக்களுக்கென தனித்தனியாக மொத்தம் மூன்று கவுன்டர்கள் செயல்பட்டு வந்தன. இதன் மூலம் நுகர்வோர் எளிதாக மற்றும் விரைவாக தங்களது மின்கட்டணத்தை செலுத்தி வந்தனர். இந்நிலையில், சமீப நாட்களாகவே ஆள் பற்றாக்குறையை காரணம் காட்டி, மின் கட்டணம் வசூலிக்கும் இரண்டு கவுன்டர்கள் திடீரென மூடப்பட்டுள்ளன. மீதி இருக்கும் ஒரேயொரு கவுன்டரில் மட்டுமே நுகர்வோர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தங்களது மின் கட்டணத்தை செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதன் மூலம் அதிக அளவில் நேரம் விரயமாவதாக நுகர்வோர் வேதனை தெரிவித்தனர்.

Related Stories: