திருவொற்றியூர் மண்டலத்தில் ரூ. 10 லட்சத்தில் சாலை சீரமைப்பு பணி துவக்கம்; மண்டல குழு தலைவர் தகவல்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலத்தில் பழுதான சாலைகளை ரூ. 10 லட்சம் மதிப்பில் சீரமைக்கும் பணிகள் துவங்கியது. சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலத்தில் 14 வார்டுகளை உள்ளடக்கிய சுமார் 750 கிமீ தூரத்துக்கு கான்கிரீட் மற்றும் தார்சாலைகள் உள்ளன. இதில், பல்வேறு தெருக்கள் வழியாக சென்று வரும் கனரக லாரிகளால் தார்சாலைகள் பழுதடைந்து சேதமாகி, குண்டும் குழியுமாக மாறிவிட்டன. இதனால் அங்கு மழைநீர் தேங்கியுள்ளது. மேலும், திருவொற்றியூர் பகுதியில் மெட்ரோ ரயில்பாதை பணிகளால் நெடுஞ்சாலைகளும் பலத்த சேதமடைந்தன.

இந்த சாலைகளை மழைக்காலத்துக்கு முன்பு சீரமைத்து தரும்படி மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசுவிடம் அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். இந்நிலையில், அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, திருவொற்றியூர் மண்டலத்தில் உள்ள அனைத்து சாலைகளையும் ரூ. 10 லட்சம் மதிப்பில் பேட்ச் வொர்க் செய்து, தற்காலிகமாக சீரமைக்க சென்னை மாநகராட்சி ஒப்புதல் வழங்கியது. இதன்படி, நேற்று முன்தினம் முதல் காலடிப்பேட்டை, ராஜா கடை, வடக்கு மாட வீதி, தெற்கு மாட வீதி, எர்ணாவூர் உள்பட பல்வேறு இடங்களில் ரூ. 10 லட்சம் மதிப்பில் தற்காலிக தார்சாலை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இதுகுறித்து மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு கூறுகையில், திருவொற்றியூர் மண்டலத்தில், மழைக் காலம் முடிந்ததும் பழுதான சாலைகளை பலகோடி மதிப்பில் புதிய தார்சாலைகளாக மாற்ற சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. எனினும், அந்த சாலைகள் வழியே வாகனங்கள் இடையூறு இல்லாமல் சென்று வருவதற்கு வசதியாக, தற்போது ரூ. 10 லட்சத்தில் தற்காலிகமாக தார்சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மழைக் காலம் முடிந்ததும் அனைத்து தெருக்களிலும் புதிய தார் சாலைகள் அமைக்கப்படும் என்றார்.

Related Stories: