அரசு குறித்து தவறான செய்திகள் பரவும்போது விழிப்புணர்வோடு இருந்து உண்மையை மக்களுக்கு விளக்க வேண்டும்: செய்தித்துறை ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் சாமிநாதன் அறிவுரை

சென்னை: அரசு குறித்து தவறான செய்திகள் பரவும்போது விழிப்புணர்வுடன் இருந்து உண்மை நிலையை மக்களுக்கு உடன் தெரிவிக்க வேண்டும் என செய்தி துறை ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார். செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் சென்னை, திருச்சி, மதுரை மற்றும் தஞ்சாவூர் மண்டல இணை இயக்குநர்கள் மற்றும் இம்மண்டலங்களுக்குட்பட்ட மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணி ஆய்வுக் கூட்டம்  சென்னையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது: மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து மனுநீதி நாள் முகாம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு பின்பு மாவட்ட ஆட்சித் தலைவருடன் பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்று இலவச மின்சாரம்,  வேளாண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படுகின்ற திட்டங்கள், பத்திரிகையாளர் ஓய்வூதியம் வழங்கும் திட்டம், இலவச பேருந்து பயணத் திட்டம், புதிய பேருந்து வழித்தடங்கள் உருவாக்கல் போன்ற திட்டங்களை விளக்கவும், அதில் பயன்பெற்ற பயனாளிகளின் நேர்காணல் செய்திகளை வெளியிட ஏற்பாடு செய்து திட்டங்களின் பயன்களைக் கடைக்கோடியில் உள்ள பொதுமக்களுக்கும் கொண்டு சேர்த்திட வேண்டும். அரசு குறித்த தவறான செய்திகள் பரவும்போது விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். அச்செய்திகள் தவறானவை என்பதை மக்களுக்கு உடனடியாக எடுத்துச் சொல்ல வேண்டும். இதனால் உண்மையான நிகழ்வு என்ன என்பது மக்களிடம் போய்ச் சேரும். மண்டல இணை இயக்குநர்கள் முழு கவனம் செலுத்தி, ஈடுபாட்டுடன் செயல்பட்டு திட்டங்களை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: