சேலம் பெண்கள் கிளைச்சிறையில் லெஸ்பியன் விவகாரத்தில் மீண்டும் வாக்குவாதம்: பாராபுத்தகம் கிழித்த 2 பேருக்கு மெமோ

சேலம்: சேலம் பெண்கள் கிளைச்சிறையில் லெஸ்பியன் விவகாரத்தில் மீண்டும் மோதல் நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் பாராபுத்தகம் கிழித்த 2 பேருக்கு மெமோ கொடுக்கப்பட்டுள்ளது. சேலம் பெண்கள் கிளைச்சிறையில் பணியாற்றும் வார்டன்களில், 2 கோஷ்டிகளுக்கு இடையே தகராறு இருந்து வருகிறது. இது தொடர்பாக  கடந்த 15 நாட்களுக்கு முன், பாரா புத்தகம் கிழிப்பு, எழுதியதை மை கொண்டு அழித்தது போன்ற சம்பவங்கள் நடந்தது. இது தொடர்பாக சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் தமிழ்செல்வன் விசாரணை நடத்தி வந்தார்.

இதற்கிடையில், கடந்த வாரம் 3 வார்டன்களிடையே லெஸ்பியன் விவகாரம் தொடர்பாக மோதல் வெடித்தது. சென்ட்ரி டியூட்டியில் இருந்த வார்டன், தனது இன்னொரு லெஸ்பியன் கூட்டாளியுடன் செல்போனில் கொஞ்சி பேசிக்கொண்டிருந்ததை பார்த்த ஏட்டு ஒருவர், திடீரென அவரை தாக்கினார். இதில் இருவரும் முடியை பிடித்துக்கொண்டு குடுமிப்பிடி சண்டை போட்டனர். இவர்களது சண்டையை தடுக்க வந்த அதிகாரியின் கையிலும் நகக்கீறல் ஏற்பட்டது. இந்த விவகாரம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக டிஐஜி சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில், சிறை எஸ்.பி.தமிழ்செல்வன் விசாரணை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் விசாரணை தீவிரமாக நடந்தது. மோதிக்கொண்ட வார்டனில் ஒருவர், 8 நாள் விடுப்பில் சென்றுவிட்டார். சண்டையை தடுத்த அதிகாரியின் கையில் இருக்கும் நகக்கீறலை வைத்து, விசாரணை நடந்து வருகிறது.  

 இந்நிலையில், லெஸ்பியன் விவகாரத்தில், பெண்கள் சிறை வளாகத்தில் கடந்த சனிக்கிழமை மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஏட்டு ஒருவர், ‘‘பலமுறை எச்சரிக்கை செய்தும் கேட்காமல் இருந்ததால், நாங்கள் எல்லோரும் அதிகாரிகளுக்கு பதில் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது,’ என்றார். அதற்கு சம்பந்தப்பட்ட ஏட்டு, ‘என்னை குற்றம்சொல்ல யாருக்கும் அருகதை இல்லை,’ என பதிலளித்தார். இதனால், காரசாரமான வார்த்தைகளால் இருவரும் மோதிக் கொண்டனர். சக வார்டன்கள் அவர்களை சமாதானப்படுத்தினர். இந்நிலையில் பாரா புத்தகம் கிழிக்கப்பட்ட விவகாரத்தில், 2 ஏட்டுகளுக்கு மெமோ கொடுக்கப்பட்டுள்ளது. 15 நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனால் சேலம் பெண்கள் கிளைச்சிறையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: