திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை நாளில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், விடுமுறை நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வார இறுதி நாட்களிலும், அரசு விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் வருகை வெகுவாக அதிகரிக்கிறது. அதனால், கோயில் நிர்வாகம் சார்பில் விரைவு தரிசனத்துக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

அதன்படி, விடுமுறை நாட்கள் என்பதால் கடந்த இரண்டு நாட்களாக அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.  ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம் வழியாக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். தரிசன வரிசையில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. அதையொட்டி, அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டிருந்தன.

மேலும், கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, அண்ணாமலையார் கோயில் 5ம் பிரகாரத்தில் சுப்பிரமணியர் காட்சியளித்த கம்பத்திளையனார் சன்னதியில், சிறப்பு வழிபாடுகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியர் காட்சியளித்தார். மேலும், சஷ்டி விரதமிருந்த ஏராளமான பக்தர்கள், கம்பத்திளையனார் சன்னதியை 108 முறை வலம் வந்த வழிபட்டனர். அதேபோல், திருவண்ணாமலை ரவுண்டானா பகுதியில் உள்ள வட வீதி சுப்பிரமணியர் கோயிலில் நேற்று மாலை சூரசம்ஹார விழா நடந்தது.

அதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக, டிசம்பர் 6ம் தேதி மகா தீப பெருவிழா நடைபெற உள்ளது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் உள்ள சம்மந்த விநாயகர் சன்னதியில், கார்த்திகை தீபத்திருவிழாவுக்கான அழைப்பிதழுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர், அழைப்பிதழ் வழங்கும் பணி தொடங்கியது.

Related Stories: