ஆன்மிகத்தில் அரசியல் கூடாது; பாஜவுக்கு கே.எஸ். அழகிரி எச்சரிக்கை

சென்னை: ஆன்மிகத்தை அரசியலில் கலக்கக் கூடாது. ஆனால், பாஜ அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசினார். திமுக தலைவராக 2வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா சென்னை கிழக்கு மாவட்டம் துறைமுகம் பகுதி திமுக சார்பில், மண்ணடி தம்புச்செட்டி தெரு பகுதியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உட்பட பலர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். விழாவில், டி.ஆர்.பாலு பேசுகையில், ‘முப்பெரும் தலைவர்களெல்லாம் நடத்திய இயக்கத்தை ஸ்டாலின் நடத்துவார் என யாரும் நினைத்துப்பார்த்திருக்க முடியாது.

காலையிலேயே தலைமைச்செயலகம் சென்று அதிகாரிகளை தூங்கவே விடுவதில்லை.  என கூறினார். கே.எஸ்.அழகிரி பேசுகையில், ‘‘திராவிட இயக்கத்துக்கு ஒரு பரிமாணத்தை கொடுத்தவர் சேகர்பாபு. சிவ பழமாக காட்சியளிக்கிறார். ஆன்மிகத்தை அரசியலில் கலக்கக்கூடாது. அதை தான் பாஜ செய்கிறது. நம்முடைய எதிரிகள் இந்த ஆட்சியை நிர்மூலமாக்க தீவிரமாக செயலாற்றுகிறார்கள். கோவை குண்டுவெடிப்பு வழக்கை என்ஐஏவிற்கு மாற்ற 4 தினங்கள் காலதாமதம் செய்ததாக ஆளுநர் கூறுகிறார். ஆளுநர் கூறுவது கருத்து அல்ல, மிகப்பெரிய குற்றச்சாட்டு. இந்த அரசு தேசவிரோதிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டி சட்டரீதியாக இந்த அரசுக்கு தொல்லை கொடுக்க அச்சாரமிடுகிறார்கள். திமுகவின் சித்தாந்தத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள்கூட ஸ்டாலின் ஆட்சியை பார்த்து நன்றாக ஆட்சி செய்கிறார் என்று பேசினார்.

Related Stories: