முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா பசும்பொன்னில் அமைச்சர்கள் மரியாதை; உதயநிதி ஸ்டாலின், தலைவர்களும் பங்கேற்பு

சாயல்குடி: தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு, பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மரியாதை செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 115வது ஜெயந்தி விழா, 60வது குருபூஜை விழா கடந்த 27ம் தேதி மாலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 3ம் நாளான நேற்று தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெற்றது. தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு, பெரியகருப்பன், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன், அர.சக்கரபாணி, பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் மற்றும் எம்பி, எம்எல்ஏக்கள், உள்ளாட்சிப்பிரதிநிதிகள் நேற்று காலை 9.30 மணியளவில் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். திமுக இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடம் சென்று மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கத் தமிழ்செல்வன், பெரியகுளம் எம்எல்ஏ சரவணக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக விமானம் மூலம் மதுரை வந்த அவர், கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு பகல் 12 மணியளவில் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ, உதயகுமார், விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். இதேபோல் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் எம்பிக்கள்  ரவீந்திரநாத், ஆர்.தர்மர், எம்எல்ஏக்கள் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன்  உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், ஜெயலலிதாவின் தோழி சசிகலா, காங்கிரஸ்  முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன்  எம்எல்ஏ, பாமக தலைவர் ஜி.கே.மணி,  முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ், முன்னாள் எம்எல்ஏ தனியரசு  உள்ளிட்ட அரசியல் கட்சியினர், மதுரை ஆதீனம் மற்றும் சமுதாய அமைப்பினர், பொதுமக்கள் மரியாதை  செலுத்தினர். விழாவை முன்னிட்டு, பசும்பொன்னில் தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் 4 டிஐஜிக்கள், 30 எஸ்பிக்கள் முன்னிலையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: