சென்னையில் 276 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்: கும்மிடிப்பூண்டிக்கு அனுப்பப்பட்டது

சென்னை: சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையின்போது சேகரமாகும் பட்டாசுக் கழிவுகள் அபாயகரமான கழிவுகள் என்பதால், ஒவ்வொரு ஆண்டும் சென்னை மாநகராட்சியின் சார்பில் இந்த கழிவுகள் தனியாக சேகரிக்கப்பட்டு கும்மிடிப்பூண்டியில் உள்ள அபாயகரமான கழிவுகளை முறைப்படுத்தும் செயலாக்க நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும்.

அதன் அடிப்படையில், இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையின் போது, கடந்த 23, 24 மற்றும் 25ம்தேதி என மூன்று நாட்களில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் 211.08 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் தூய்மைப் பணியாளர்கள் மூலம் தனியாக சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் 26, 27ம்தேதிகளில் பட்டாசு கழிவுகள் தூய்மைப் பணியாளர்களால் தனியாக சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 4 நாட்களில் மொத்தமாக 276 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் 120 கனரக வாகனங்களின் மூலமாக கும்மிடிப்பூண்டியில் உள்ள அபாயகரமான கழிவுகளை முறைப்படுத்தும் செயலாக்க நிலையத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: