தமிழக உரிமைக்கான ஒப்பந்த நாள் இன்று....பெரியாறு அணையின் உறுதியை நிரூபித்த திமுக அரசு

*5 மாவட்டங்களின் பாசனத்துக்கான முக்கிய நீராதாரம்

*தென்தமிழகத்தின் 70 லட்சம் மக்களுக்கு குடிநீர் ஆதாரம்

கூடலூர் : கர்னல் ஜான்பென்னிகுக் தலைமையிலான பிரிட்டீஷ் ராணுவத்தின் கட்டுமானத்துறையால், ஐந்து மாவட்ட நீராதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு 127 ஆண்டுகள் கடந்து விட்டது. இந்த பெரியாறு அணையே மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களின் பாசனத்துக்கான முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் போக, வறண்ட பிரதேசங்கள் நிறைந்த தென் தமிழகத்தின் 70 லட்சம் மக்களுக்கு குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது.

பெரியாறு அணை கட்டவும், அந்த அணையில் தமிழகத்தின் 999 ஆண்டுகளுக்கான உரிமை குறித்த ஒப்பந்தத்தை திருவிதாங்கூர் சமஸ்தானமும், சென்னை ராஜதானியும் செய்துகொண்ட ஒப்பந்த நாள் (1886 அக். 29) இன்று.18ம் நூற்றாண்டின் இறுதியில் தென் தமிழகத்தை வளப்படுத்தி வந்த ஆறுகள் பொய்த்துப் போனபோது. சீர்குலைந்த வேளாண்மையை மேம்படுத்தவும், இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், தமிழகத்தில் சிவகிரி மலையில் உற்பத்தியாகி பெருந்துறையாறு, சின்னாறு, சிறுதோணியாறு, கட்டப்பனையாறு, இடமலையாறு மற்றும் முல்லையாறை சேர்த்துக்கொண்டு 300 கி.மீ வடமேற்கு திசையில் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கும் பெரியாறை தடுத்து ஒரு அணை கட்டி, நதியின் ஓட்டத்தை கிழக்கு பக்கம் தென்தமிழகம் நோக்கி திருப்பி கொண்டு வர, கர்னல் ஜான் பென்னிகுக் திட்டம் தயார் செய்தார். ஆனால் அணைகட்டி முடிக்கப்பட்டால் தண்ணீர் தேங்கும் நிலப்பரப்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் எல்லைக்குள் வருவதால் திருவிதாங்கூர் மகாராஜாவின் அனுமதி வேண்டினர்.பின் 1886 அக்.29ம் நாள் முல்லைப் பெரியாறு அணை 999 ஆண்டு ஒப்பந்தம் உருவானது.

vதிருவிதாங்கூர் மகாராஜா சார்பாக திவான் ராம்ஐயங்காரும், பிரிட்டீஷ் கவர்மென்ட் செக்ரட்டரி ஆப் ஸ்டேட் பார் இந்தியன் கவுன்சில் உறுப்பினர் ஹாமில்டனும் கையெழுத்திட்டனர். அணை கட்டினால் தண்ணீர் தேங்கும் 8000 ஏக்கர் பரப்பளவு நிலத்திற்கும், தனியே 100 ஏக்கர் நிலத்திற்குமாக குத்தகைத் தொகையாக ஏக்கருக்கு 5 ரூபாய் தருவதாக சென்னை ராஜதானி ஒப்புக்கொண்டது.மனிதனால் உருவாக்கப்பட்ட ஓர் அற்புதம்1887ல் செப்டம்பர் மாதம் பெரியாறு அணை கட்டும் வேலைக்கான முதல் கல்லை நட்டார் பென்னிகுக். பின் 1895 முல்லைப் பெரியாறு அணை கட்டிமுடிக்கப்பட்டது. அன்றைய கணக்கின்படி பெரியாறு அணைக்காக மொத்தம் 81.30 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டது.

மதராஸ் கவர்னர் வென்லாக் பிரபு தலைமையில் 1895, அக்டோபர் மாதம் 10 ஆம் நாள் முல்லைப் பெரியாறு அணை அதிகாரப் பூர்வமாக திறக்கப்பட்டது. அவர் ‘‘மனிதனால் உருவாக்கப்பட்ட ஓர் அற்புதம்’’ என பெரியாறு அணையை சிறப்பித்தார். நீண்ட பல்நோக்கு திட்டத்தின் செயல்பாடுகளை கருத்தில் கொண்டு பெரியாறு அணை கட்டப்பட்டுள்ளதால், அணைநீரானது எல்லாக் காலங்களிலும் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் அன்றே இரு மாநிலமும் 999 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் பதிவு செய்துள்ளது.

எனவே பெரியாறு அணை குறித்து பொய்பரப்புரை செய்யும் கேரள வக்கீல் ரசல்ஜோய் தலைமையிலான சேவ் கேரளா பிரிகேட் அமைப்பினர், இடுக்கி எம்பி டீன்குரியகோஸ், முன்னாள் எம்பி ஜோய்ஸ் ஜோர்ஜ், பீர்மேடு எம்எல்எ வாழூர் சோமன், முன்னாள் அமைச்சர் பி.ஜே ஜோசப், மலையாள திரைப்பட நடிகர் பிரிதிவிராஜ் போன்ற கேரள அரசியல்வாதிகளும், நடிகர்களும் இதை மறக்கவும் கூடாது, மறுக்கவும் முடியாது.

ஒப்பந்தம் என்ன?

155 அடி உயர அணையை கட்டுவதற்கும், தண்ணீரை ஒரு குகைப்பாதை வழியாக தமிழகத்திற்கு கொண்டு செல்வதற்கும் ஒப்பந்தத்தில் உறுதி செய்யப்பட்டது. அணையின் மராமத்துப் பணிகள் செய்வதற்கான பொருட்களை எடுத்துச்செல்ல சென்னை மாகாணத்திற்கு முழுமையான உரிமை வழங்குவதுடன், அணையினுள் அடங்கும் மரம் மற்றும் மரக்கட்டைகளை, அணையின் நலன் கருதி செயல்படுத்தும் திட்டங்களுக்கு சென்னை மாகாண அரசு எவ்வித கட்டணங்களும் கட்டவேண்டியது இல்லை என்றும், போக்குவரத்தின் முழு உரிமையும், அணையின் அனைத்து செயல்பாடுகளுக்கும் உரிமை, அதிகாரம், சுதந்திரம் சென்னை மாகாணத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுக அரசு செய்த மூன்று தவறுகள்

பெரியாறு அணை பலவீனம் அடைந்துள்ளது என கேரள அரசு கூறியதால், 23.11.1979ல் மத்திய நீர்வள ஆணைய தலைவர் கே.சி.தாமஸ் தலைமையில் குழுவினர் அணையை ஆய்வு செய்தனர். ஆய்வுக்குப்பின்னர் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பழைய அணையை ஒட்டி புதிய சப்போர்ட்அணை ஒன்றை மூன்றுகட்ட பணியுடன் செய்து முடிப்பது என்றும், அப்பணி முடியும்வரை அணையின் நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைப்பது, பணிகள் அனைத்தும் முடிந்த பின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என 25.11.79ல் தமிழக, கேரள அரசு உயரதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இது அன்று தமிழகத்தை ஆண்ட அதிமுக அரசு செய்த முதல் தவறு.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒய்.கே. சபர்வால், சி.கே.தாக்கர், பி.கே.பாலசுப்ரமணியன் அடங்கியகுழு 27.02.2006ல் அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக தமிழகஅரசு உயர்த்திக்கொள்ளலாம். மேலும் சுயேட்சை நிபுனர்கள் அணையின் பாதுகாப்புகுறித்து ஆய்வுசெய்தபின் அணையின்நீர்மட்டத்தை படிப்படியாக 152 அடிவரை உயர்த்திக்கொள்ளலாம் என தீர்ப்பு வழங்கியது. அப்போது ஆட்சியிலிருந்த அதிமுக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற காலம் தாழ்த்தியதால், கேரளஅரசு, மாநிலத்திலுள்ள அனைத்து அணைகளையும் அவைகளின் பாதுகாப்பை கருதி தன்பொறுப்பிலேயே எடுத்துக்கொள்வதற்கு வகைசெய்யும் விதமாக 17.03.06ல் ‘‘கேரள அணைகள் பாதுகாப்பு சட்டதிருத்தம்’’ சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றியது. இது அதிமுக அரசு செய்த 2வது தவறு.

அணையில் 142 அடி தண்ணீர் தேக்கவிடாமல் தடுப்பதற்காகவே பெரியாறு அணையில் ரூல்கர்வ் நடைமுறைப்படுத்த கேரளஅரசு, மத்திய நீர்வள ஆணையத்திற்கு அழுத்தம் கொடுத்தது. அதன் காரணமாக கடந்த 2021 ஜனவரி 19ல் மத்திய நீர்வள ஆணைய இயக்குநர் நித்யானந்த ராய், இணை இயக்குநர் ஐஸ்லி ஐசக் குழுவினர் முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்து ரூல்கர்வ் அட்டவனை தயார் செய்ய சொல்லியிருக்கிறார்கள். அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு ரூல்கர்வ் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்காததது அந்த அரசு செய்த 3வது தவறு.

தமிழக உரிமையை நிலைநாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

கடந்த ஆண்டு பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியானபோது, கேரளாவில் வக்கீல் ரசல்ஜோய் தலைமையிலான சேவ் கேரளா பிரிகேட் அமைப்பு மற்றும் அரசியல்வாதிகள், திரைப்பட நடிகர் பிரிதிவிராஜ் உட்பட பலர் பெரியாறு அணை உடைந்துவிடும், புதிய அணை, புதிய ஒப்பந்தம் என உண்ணாவிரதம், மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தினர். ஆனால் 2021 நவம்பர் 30ல் பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்தது. அன்று முதல் 12 நாட்கள் நீர்மட்டத்தை 142 அடியாகவும், 18 நாட்கள் 141.50 அடிக்கு குறையாமலும் அணையில் தண்ணீரை நிலை நிறுத்தி, பெரியாறு அணை இன்னமும் பலமாகத்தான் உள்ளது என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு உறுதி செய்ததோடு, அணையில் தமிழக உரிமையையும் நிலைநாட்டியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: