மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ஆங்கிலத்தில் தான் பேசுவேன் அடம்பிடித்த பாஜ உறுப்பினர்: ஐ.நா.வில் பிரதமரே தமிழில் பேசுகிறார் என உறுப்பினர்கள் ஆரவாரம்

சென்னை: சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தின் நேரமில்லா நேரத்தில் 135வது வார்டு உறுப்பினர் உமா ஆனந்த் (பா.ஜ) எழுந்து பேசினார். அப்போது திமுக உறுப்பினர் ஒருவர் எழுந்து வெளியில் சென்றார். அவரை பார்த்து, ஏன் ஓடுகிறீர்கள் என்று உமா ஆனந்த் கேட்டார்.

அதற்கு திமுக உறுப்பினர்கள், திமுகவினர் ஓடமாட்டார்கள் என்றனர். இதையடுத்து உமா ஆனந்த் ஆங்கிலத்தில் பேசினார். அப்போது மற்ற உறுப்பினர்கள், ‘தமிழில் பேசுங்கள், பிரதமர் மோடியே ஐ.நா.சபையில் தமிழில் பேசுகிறார்’ என்று தெரிவித்தனர். ‘நான் என்ன இந்தியிலா பேசினேன். ஆங்கிலத்தில் தானே பேசுகிறேன்’ என்று அவர் கூறினார்.

பின்னர் ஆங்கிலம் கலந்த தமிழில் பேசுகிறேன் என பேச ஆரம்பித்தார். அதனை தொடர்ந்து மழைநீர் பணிகளை துரிதமாக மேற்கொண்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, ஆணையர் ககன்தீப்சிங் பேடி ஆகியோருக்கு பாராட்டுகள். தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும்,’ என்றார்.  

அதற்கு மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, ‘தெருநாய்களை குறைக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதற்கு மாநகராட்சியும், புளூகிராஸ் அமைப்பும் இணைந்து இனப்பெருக்க தடை சிகிச்சை செய்யப்படுகிறது. சாலைகள், தெருக்கள், கடற்கரைகள், பூங்காக்களில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் 5 ஆயிரத்து 447 மாடுகள் அவ்வாறு பிடிக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: