படைப்பாற்றலை வளர்க்க மாணவர்களுக்கு மாநில அளவில் கலை பண்பாட்டு திருவிழா-நெல்லையில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

நெல்லை : மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கவும், பாரம்பரிய கலைகளை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காகவும் நடப்பு கல்வியாண்டிற்கான 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கான கலை பண்பாட்டு திருவிழா தொடங்கியது.பள்ளிக்கல்வித்துறை  சார்பில் மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கவும், பாரம்பரிய கலைகளை  உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காகவும் ஆண்டுதோறும் கலைத்திருவிழா  நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக நடத்த முடியாத சூழல்  நிலவியது. இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டிற்கான இந்தத் திருவிழா தமிழக  அளவில் அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கண்காணிப்பில்  தொடங்கப்பட்டுள்ளது.

நெல்லையில் மாவட்ட அளவில் நேற்று தொடங்கிய  இந்த போட்டியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.  மொத்தம் 10 போட்டிகள் நடைபெறுகின்றன. பாளை. சாராள்தக்கர் பள்ளி கலையரங்கில்  நடைபெற்ற இந்நிகழ்ச்சியை தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா  தொடங்கி வைத்தார். சாராள்தக்கர் பள்ளி தாளாளர்  விக்டர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியை பெர்சிஸ் ஞானசெல்வி  வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புஷ்பா நன்றி கூறினார்.

நேற்று முதல்  நாள் நிகழ்ச்சியில் நடனம், பரதநாட்டியம், நாட்டுப்புற கலை, உள்ளூர் தொன்மை  பொருட்களை உருவாக்குதல், ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

இன்றும் 2ம்  நாளாக போட்டிகள் நடைபெற உள்ளன. ஒவ்வொரு போட்டியிலும் ஒரு மாணவர்,  ஒரு மாணவி என முதலிடம் பிடிப்பவர்கள் 20 பேர் தேர்வு செய்யப்பட்டு  நாமக்கல்லில் வரும் நவம்பர் 15ம்தேதி தொடங்கும் மாநில இறுதி போட்டியில்  பங்கேற்பார்கள். பின்னர் தேசிய அளவிலான போட்டிகள் ஒடிசாவில் வரும்  ஜனவரியில் நடைபெற உள்ளது. கலை பண்பாட்டு திருவிழா  ஏற்பாடுகளை முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி செய்துள்ளார்.

Related Stories: