மாநிலம் முழுவதும் தொடர் போராட்டம்; கேரள கவர்னர் மாளிகை முற்றுகை: மார்க்சிஸ்ட் கட்சி அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரள அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கும் இடையே நிலவி வரும் பனிப்போர் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தன்னை தரக்குறைவாக விமர்சிக்கும் அமைச்சர்கள் பதவியில் நீடிக்க முடியாது என்று ஏற்கனவே கவர்னர் ஆரிப் முகம்மது கான் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் கவர்னர் ஆரிப் முகம்மது கான் நேற்று திடீரென முதல்வர் பினராயி விஜயனுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.

அதில், நிதியமைச்சர் பாலகோபால் தனது விருப்பத்திற்கு மாறாக நடந்து கொண்டுள்ளார். அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். கவர்னரின் இந்த நடவடிக்கைக்கு சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ், முஸ்லிம் லீக் உள்பட பெரும்பாலான கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதற்கிடையே கவர்னரின் கோரிக்கையை நிராகரித்த முதல்வர் பினராயி விஜயன் நிதியமைச்சரை பதவி நீக்கம் செய்ய முடியாது என்று கூறி பதில் கடிதம் அனுப்பினார்.

கவர்னரின் விருப்பத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளாவிட்டாலும், நிதியமைச்சர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என்று பினராயி விஜயன் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதனால் கேரள அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கவர்னருக்கு எதிராக கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டத்தை தொடங்கி உள்ளன. சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகள் நேற்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் கவர்னரை எதிர்த்து போராட்டம் நடத்தின. இந்தப் போராட்டம் வரும் நாட்களிலும் தொடரும் என்று இக்கட்சிகள் அறிவித்துள்ளன.

இதற்கிடையே நவம்பர் 15ம் தேதி கவர்னர் மாளிகை முன்பு 1 லட்சம் பேர் கலந்து கொள்ளும் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று சிபிஎம் அறிவித்துள்ளது. தொடர்ந்து திருவனந்தபுரம் வெள்ளையம்பலம் பகுதியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு நேற்று முதல் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: