ஐதராபாத் பண்ணை வீட்டில் ரகசிய கூட்டம் டிஆர்எஸ் எம்எல்ஏக்களிடம் பாஜ தலா ரூ.100 கோடி பேரம்?... ரூ.15 கோடி பறிமுதல்; சாமியார் உள்பட 3 பேர் கைது

திருமலை: ஐதராபாத்தில் டிஆர்எஸ் எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.100 கோடி தருவதாக கூறி பாஜ நள்ளிரவு நடத்திய ரகசிய பேரம் அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். தெலங்கானாவில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையிலான ஆளும் டிஆர்எஸ் கட்சியை தோற்கடிக்க பாஜக பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது. கடந்த சில தினங்களாக பாஜகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் டிஆர்எஸ் கட்சியில் இணைவதும், டிஆர்எஸ் கட்சியில் உள்ளவர்கள் பாஜவில் இணைவதுமாக உள்ளது.

இந்நிலையில் முனுகூரு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ராஜகோபால்ரெட்டி, தனது பதவியை சில மாதங்களுக்கு முன் ராஜினாமா செய்து பாஜவில் இணைந்தார். அங்கு நவம்பர் 3ம்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக வேட்பாளராக அவரே களம் இறங்குகிறார். இந்நிலையில் ஐதராபாத் அஜீஸ் நகரில் உள்ள பண்ணை வீட்டில் டிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்களை பாஜவினர் விலைக்கு வாங்க பேரம் பேசுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 அதன்பேரில் கமிஷனர் ஸ்டீபன்ரவீந்தர் தலைமையிலான போலீசார் பண்ணை வீட்டுக்கு நேற்றிரவு அதிரடியாக சென்று சோதனை நடத்தினர். அப்போது டிஆர்எஸ் கட்சியை சேர்ந்த பைலட் ரோஹித் ரெட்டி, ரேகா காந்தாராவ், குவ்வாலா பாலராஜு, பீரம் ஹர்ஷவர்தன் ஆகிய 4 எம்எல்ஏக்கள் இருந்தனர். இவர்களுக்கு தலா ரூ.100 கோடி தருவதாக பாஜக பேரம் பேசியதாக கூறப்படுகிறது.

இதற்காக பாஜவுடன் தொடர்பில் உள்ளதாக கூறப்படும் டெல்லியை பூர்வீகமாக கொண்ட பரிதாபாத் பகுதியை சேர்ந்த சாமியார் ராமச்சந்திரபாரதி, திருப்பதியை சேர்ந்த பீடாதிபதி சிம்மயாஜி, நந்தகுமார் ஆகியோரும் அங்கிருந்தனர். இதையடுத்து அங்கிருந்த 4 எம்எல்ஏக்களை போலீசார் விடுவித்தனர். பின்னர் பண்ணை வீடு முழுவதும் சோதனை நடத்தினர். அப்போது 3 சூட்கேஸ்கள் இருந்தது தெரியவந்தது.

அவற்றில் ரூ.15 கோடி இருந்தது தெரியவந்தது. அவற்றை கட்சி மாறும் எம்எல்ஏக்களுக்கு அட்வான்ஸ் தொகையாக கொடுக்க திட்டமிட்டிருக்கலாம் எனக்கருதப்படுகிறது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சாமியார் ராமச்சந்திரபாரதி, பீடாதிபதி சிம்மயாஜி, நந்தகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தெலங்கானா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக மறுப்பு-டிஆர்எஸ் ஆவேசம்

இச்சம்பவம் குறித்து தெலங்கானா பாஜக தலைவர் பண்டிசஞ்சய் கூறுகையில்:

இவை அனைத்தும் டிஆர்எஸ் கட்சி செய்யும் நாடகம். ரகசிய பேரம் சம்பவத்திற்கும் பாஜகவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இது டிஆர்எஸ் கட்சியின் திட்டமிட்ட செயல். இவ்வாறு கூறினார். டிஆர்எஸ் கட்சி மூத்த அமைச்சர் கூறுகையில், ‘தெலங்கானா மாநிலம் மகாராஷ்டிராவை போன்றது என பாஜக நினைக்கிறது. இங்கு ஏக்நாத் ஷிண்டே போல் யாரும் இல்லை. கட்சி தலைமைக்கோ, கட்சிக்கோ யாரும் எதிராக செயல்படமாட்டார்கள்’ என்றார்.

Related Stories: