முத்துராமலிங்க தேவர் பிறந்தநாள் பசும்பொன் செல்வதை தவிர்த்தார் எடப்பாடி: சென்னை நந்தனத்தில் மரியாதை செலுத்துகிறார்

சென்னை: முத்துராமலிங்க தேவர் பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி சென்னை, நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதன்மூலம் ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் செல்வதை அவர் தவிர்த்து விட்டார். அதிமுக தலைமை கழகம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 115வது ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வருகிற 30ம் தேதி (ஞாயிறு) காலை 10 மணியளவில் சென்னை, நந்தனம் அண்ணாசாலையில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருஉருவச் சிலைக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். அதனைத் தொடர்ந்து, தலைமை கழக செயலாளர்களும், முன்னாள் அமைச்சர்களும் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.

இதில் கட்சியினர் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் எடப்பாடி பழனிசாமி, பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்துவதை தவிர்த்துள்ளது உறுதியாகியுள்ளது. அதேநேரம் எடப்பாடி அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், செல்லூர் ராஜு, காமராஜ், ஓ.எஸ்.மணியன், சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேர்வர் சிலைக்கு மரியாதை செலுத்துவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: