தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை: ஊட்டிக்கு 43,500 சுற்றுலா பயணிகள் வருகை

ஊட்டி: தீபாவளி பண்டிகை  விடுமுறையை முன்னிட்டு, ஊட்டிக்கு கடந்த 4 நாட்களில் 43,500 சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். நீலகிரி மாவட்டம் சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கி வருகிறது. ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தபோதிலும், பண்டிகை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் அதிகளவு வருவது வழக்கமாக உள்ளது. தீபாவளி பண்டிகை முடிந்த நிலையிலும் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகிறார்கள். ஊட்டியில் 2வது சீசன் நடைபெறுவதால் தேனிலவு தம்பதிகள் வருகையும் அதிகரித்துள்ளது. இதனால் ஊட்டி நகரில் உள்ள ஓட்டல்கள், காட்டேஜ்களில் அனைத்து அறைகளும் நிரம்பின. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா உள்ளிட்ட இடங்களில் கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.

பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்ட நிலையில் சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு கடந்த சனிக்கிழமை 7 ஆயிரம் பேரும், ஞாயிற்றுகிழமை 12 ஆயிரத்து 761 பேரும், தீபாவளி தினத்தன்று 17 ஆயிரத்து 722 பேர் வந்து சென்றுள்ளனர். நேற்று 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் என மொத்தம் 43 ஆயிரத்து 500 பேர் வருகை தந்தனர். கொடநாடு காட்சி முனையிலும் கூட்டம்: கோடநாடு காட்சி முனையை கண்டு ரசிக்க தமிழகத்தில் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.

இங்கு அமைந்துள்ள ஆழமான பள்ளத்தாக்குகள், ராக் பில்லர், பச்சை பசேல் என காட்சியளிக்கும் அடர்ந்த வன பகுதிகளையும், அதன் நடுவில் வசிக்கும் பழங்குடியினர் மற்றும் தெங்குமரஹாடா, கல்லம்பாளையம் உள்ளிட்ட குக்கிராமங்களையும், தமிழகத்தின் முக்கிய அணைகளில் ஒன்றான பவானிசாகர் அணை மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலத்தின் குண்டல்பேட், அங்களா உள்ளிட்ட பகுதிகளையும் கண்டு ரசித்து செல்வது வழக்கம். கொடநாடு பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக குளுகுளு காலநிலை நிலவியது. அப்போது தமிழகம், கர்நாடகா எல்லை பகுதிகளில் உள்ள மலை முகடுகளின் நடுவில் உருவான அடர்ந்த வெண் படலம் சூழ்ந்த மேகமூட்டங்கள் மலைகளின் மீது தவழ்ந்து செல்வதை சுற்றுலா பயணிகள் மெய் மறந்து கண்டு ரசித்தனர். இந்த ரம்மியமான காட்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தது மட்டுமல்லாமல் செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.

Related Stories: