கன்னியாகுமரியில் தடையை மீறி மரணப்பாறையில் செல்பி எடுத்த 2 பேர் வழுக்கி விழுந்து காயம்

கன்னியாகுமரி: மரணபாறையில் தடையை மீறி செல்பி எடுத்த 2 பேர் வழுக்கி விழுந்து காயமடைந்தனர்.  தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் இன்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அதிகாலை திரிவேணி சங்கம கடற்கரையில் திரண்டவர்கள் சூரிய உதயத்தை ரசித்தனர். பின்னர் கடலில் குடும்பத்துடன் புனித நீராடி மகிழ்ந்தனர். தொடர்ந்து பூம்புகார் படகில் சென்று கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலையை ரசித்தனர்.

இதற்கிடையே கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் திரிவேணி சங்கம கடலில் உள்ள மரண பாறைகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கன்னியாகுமரி பேரூராட்சி சார்பில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளன. அதையும் மீறி இன்று காலை இளைஞர்கள், இளம்பெண்கள் சிலர் மரணப்பாறையில் ஏறி நின்று செல்பி எடுத்தனர். அப்போது, 2 பேர் வழுக்கி கீழே விழுந்தனர். அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இருப்பினும் மற்றவர்கள் ஆபத்தை உணராமல் மரண பாறைக்கு சென்று கொண்டுதான் இருந்தனர். ஆகவே சுற்றுலா பயணிகளின் அத்துமீறலை தடுக்கும் வகையில், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரின் ரோந்து பயணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: