அக்டோபர் இறுதிக்குள் வட கிழக்கு பருவமழை பெய்ய தொடங்கும்

சென்னை: அக்டோபர் மாதம் இறுதிக்குள் வட கிழக்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ம் தேதி தொடங்கி ஜனவரி மாதம் வரை பெய்யும். அதே போல இந்த ஆண்டு அக்டோபர் 20ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில், பருவமழை தொடங்கும் நாள் தள்ளிப் போகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் மாதம்  இறுதிக்குள் மழை தொடங்கிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 121 ஆண்டு வரலாற்றில் ஒவ்வொரு அக்டோபர் மாதம் 20ம் தேதிதான் வடகிழக்கு பருவமழைதொடங்கியுள்ளது.

கடந்த 1915ம் ஆண்டில் நவம்பர் 11ம் தேதி வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டில் அக்டோபர் 25ம் தேதி மழை பெய்யத் தொடங்கியது. அதனால் அதிக அளவி்ல் தமிழகத்துக்கு மழை கிடைத்தது. இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை  கேரளாவில் பெய்யத் தொடங்கியதில் இருந்தே தமிழகத்திலும் மழை பெய்து கொண்டே இருந்ததால் பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு 21, அல்லது 22ம் தேதிகளில் தொடங்கிவிடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது உள்ள வானிலை நிகழ்வுகளின் அடிப்படையில் இந்த மாதம் இறுதிக்குள் வட கிழக்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: