மணலி மண்டலத்தில் ரூ. 25 லட்சத்தில் உயர் மின்கோபுர விளக்குகள்: மண்டல குழு தலைவர் துவக்கி வைத்தார்

திருவொற்றியூர்: மணலி மண்டலத்தில், ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் உயர் மின்கோபுர விளக்குகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மண்டல குழு தலைவர் துவக்கி வைத்தார். சென்னை மாநகராட்சி, மணலி மண்டலத்தில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில், இரவு நேரங்களில், வழிப்பறி, கொள்ளை, கொலை மற்றும் பாலியல் சீண்டல் போன்ற குற்றச் சம்பவங்களை தடுக்க, 5 இடங்களில் 5 உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்க மணலி மண்டல மின்விளக்கு பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டனர். இதன்படி, ரூ.25 லட்சம் மதிப்பில் மஞ்சம்பாக்கம், மாத்தூர், பெரியதோப்பு, ஜலகண்ட மாரியம்மன் கோயில் தெரு உள்பட 5 இடங்களில் நடைபெற்று வந்த உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் முடிவடைந்தன.

இதனையடுத்து, நேற்று முன்தினம் மாலை மஞ்சம்பாக்கத்தில், மாநகராட்சி சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பில் 5 இடங்களில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்குகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில்,  மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, உயர்கோபுர மின்விளக்குகளை துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில், கவுன்சிலர் காசிநாதன், திமுக நிர்வாகிகள், மாநகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: