மடிப்பாக்கத்தில் பாதாள சாக்கடை பணி தாமதம் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு: அதிகாரிகள் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு

ஆலந்தூர்: மடிப்பாக்கம் தெய்வானை நகரில் உள்ள பாதாள சாக்கடை பணிகளை முடிக்காத  அதிகாரிகளால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளனர். சென்னை பெருங்குடி மண்டலம் 187வது வார்டுக்கு உட்பட்ட மடிப்பாக்கம்  தெய்வானை நகரில் உள்ள தெருக்களில் மெட்ரோ கழிவுநீர் அகற்று வாரிய மூலம் பாதாள சாக்கடை பணி கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது. நகரில் பல பகுதிகளில் இந்த வேலை முடிந்தபோதும் கழிவுநீர் அகற்று வாரிய அதிகாரிகள் தோண்டப்பட்ட பள்ளங்களை மூடாததால் அந்தப் பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

 இதில்,  அவசியத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்ல  முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, வயதான பெரியவர்கள், வாக்கிங் செல்பவர்கள் ரோட்டில் நடக்கஅவ பயப்படுகிறார்கள்.  

பைக்குகளில் செல்வோரின் நிலைமையும பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளின் நிலைமையும் அந்தோ பரிதாபமாக உள்ளது. அவ்வப்போது பள்ளங்களில் உள்ள சேற்றில் சறுக்கி விழுந்து எழுந்து செல்லும் நிலை உள்ளது. பெருங்குடி மண்டல அலுவலகத்தில் இதுகுறித்து  புகார் கொடுத்தால் மெட்ரோ கழிவுநீர் அகற்று வாரிய அதிகாரிகள், பாதாள சாக்கடை பணிகளை தாமதப்படுத்துவதால்  சாலை போடும் பணி தடைபடுவதாகவும். இந்த பணிகளை முடித்து கொடுத்தால் உடனே சாலை போடும் பணியை முடித்து தருவோம் என மாநகராட்சி அதிகாரிகள் பதில் கூறுகின்றனர். மெட்ரோ கழிவுநீர் அகற்று வாரிய அதிகாரிகளை அனுகினால் அவர்களோ விரைவில் பணிகளை முடித்து தருகிறோம் என பதில் கூறுகின்றனர். ஆனால், அதிகாரிகள் இந்த விஷயத்தில் மெத்தன போக்கை கடைபிடிப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இங்குள்ள தெய்வானை நகர் 1,2,3,4,7,போன்ற தெருக்களில் மேடும் பள்ளமுமாக உள்ள மணல் திட்டுக்களால் அவ்வப்போது  பெய்து வரும் மழையால்  சேரும் சகதியுமாக மாறிவிடுவதாகவும், இந்த சேற்றின் மீது நடப்பது, சர்க்கஸ் கம்பி மேல் நடப்பது போன்ற பயத்தை ஏற்படுத்துவதாக அந்த பகுதி முதியவர் ஒருவர் தெரிவித்தார். அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் பாதாள சாக்கடை முடிந்த இடங்களில் உள்ள பள்ளங்களையாவது போர்க்கால அடிப்படையில் மணல், ஜல்லி கொட்டியாவது உடனடியாக மூட நடவடிக்கை வேண்டும் என்பதே  மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: