பூக்கடையில் பரபரப்பு சென்ட்ரல் வங்கியில் தீ விபத்து: கம்ப்யூட்டர், முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்

தண்டையார்பேட்டை: பூக்கடையில் உள்ள சென்ட்ரல் வங்கியில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில், கம்ப்யூட்டர் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமானது. சென்னை பூக்கடை என்எஸ்சி போஸ் சாலை, தங்கசாலை சந்திப்பில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி இயங்கி வருகிறது. இங்கு, சவுகார்பேட்டை, பூக்கடை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பலர், கணக்கு வைத்துள்ளனர். நேற்று முன்தினம் மாலை பணி முடிந்ததும் ஊழியர்கள், வங்கி கதவை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் வங்கியில் இருந்து கரும்பு புகை வந்தது. சிறிது நேரத்தில் குபுகுபுவென அதிகளவில் புகை வெளியேறி தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். தண்டையார்பேட்டை, ராயபுரம், எஸ்பினேடு ஆகிய பகுதிகளில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மாவட்ட தீயணைப்பு அதிகாரி லோகநாதன் மேற்பார்வையில், நிலைய அதிகாரி செல்வம் தலைமையில் 25 வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், வங்கி முழுவதும் புகை பரவியிருந்ததால் உள்ளே செல்ல முடியாமல் வீரர்கள் திணறினர். இதையடுத்து நவீன இயந்திரம் மூலம் புகையை உறிஞ்சி எடுத்துவிட்டு, வங்கிக்குள் சென்று 2 மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இருந்தபோதிலும் வங்கி அறையில் இருந்த கம்ப்யூட்டர், பாஸ் புக், செக் புக் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் எரிந்து சேதமானது. தண்ணீரை பீய்ச்சியடித்து உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. அதிகாலை நேரம் என்பதால் வாடிக்கையாளர்கள், வங்கி ஊழியர்கள் இல்லை. அதனால் உயிர் சேதமும் தவிர்க்கப்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் பூக்கடை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: