மணலி மண்டலத்தில் விளையாட்டு மைதானம் சீரமைக்க ரூ.6.60 கோடி நிதி: மாநகராட்சி ஒதுக்கியது

திருவொற்றியூர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள விளையாட்டு மைதானங்களை நவீனமுறையில் சீரமைக்க மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன்படி, டுபிட்கோ நிதி உதவியுடன் மணலி மண்டலத்தில் மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் முன்னிலையில், 19வது வார்டு கவுன்சிலர் காசிநாதன் தீர்மானத்தின்படி, மாத்தூர் எம்எம்டிஏ 2வது பிரதான சாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தை ரூ.2.20 கோடி செலவிலும், 21வது வார்டு கவுன்சிலர் முல்லை ராஜேஷ் சேகர் வைத்த தீர்மானத்தின்படி, அம்பேத்கர் தெருவில் உள்ள விளையாட்டு மைதானம் ரூ.2.10 கோடி செலவிலும் புதுப்பிக்கப்பட உள்ளது.

இதுபோல், 22வது வார்டு கவுன்சிலர் தீர்த்தி வைத்த கோரிக்கையின்படி, சின்னசேக்காடு ஈவெரா பெரியார் தெருவில் உள்ள விளையாட்டு மைதானம் ரூ.2.30 கோடியிலுமாக மொத்தம் ரூ.6.60 கோடி செலவில் 3 விளையாட்டு மைதானங்களை சீரமைக்க மணலி மண்டல அதிகாரிகள் திட்ட மதிப்பீடு தயார் செய்து, ஆவண நகர்வுகள் முடிந்தபின் பணிகள் துவங்க உள்ளது. இந்நிலையில், சின்னசேக்காடு ஈ.வெ.ரா. பெரியார் தெருவில் சீரமைக்கப்பட உள்ள விளையாட்டு மைதானத்தை கே.பி.சங்கர் எம்எல்ஏ, கவுன்சிலர் தீர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர். ‘‘விளையாட்டு வீரர்கள் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கும் வகையில் நவீனமுறையில் மைதானத்தை விரைவில் சீரமைக்க வேண்டும்’’ என்று கே.பி.சங்கர் எம்எல்ஏ, மண்டல உதவி ஆணையர் கோவிந்தராஜ், செயற்பொறியாளர் காமராஜ், உதவி செயற்பொறியாளர் தேவேந்திரன் ஆகியோரிடம் கேட்டுக்கொண்டார்.

Related Stories: