காங்கயம் வாரச்சந்தை குறித்து துண்டு பிரசுரத்தில் இந்தி வாசகம்: குத்தகைதாரருக்கு வலுக்கும் கடும் எதிர்ப்பு

காங்கயம்:  காங்கயம் வாரச்சந்தை குறித்த அறிவிப்பில் இந்தி மொழி வாசகங்களுடன் துண்டு பிரசுரம் அடித்த குத்தகைதாரருக்கு பொதுமக்கள் இடையே கடும் எதிர்ப்பும், கண்டனமும் வலுத்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. திங்கள் தோறும் நடக்கும் இந்த சந்தையின் மூலம் காங்கயம் நகரம் மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பல்வேறு கிராம மக்கள் தங்களுக்கு தேவையான மளிகை காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்கி செல்வர். இதேபோல சுற்று வட்டார விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி உள்ளிட்ட பொருட்களை விற்பனைக்காக கொண்டு வருவர்.

தற்போது சந்தை கடைகளுக்கு  சுங்கம் வசூல் குத்தகையை பழனிசாமி என்பவர் எடுத்துள்ளார். காங்கயம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள எண்ணெய் ஆலைகள், அரிசி ஆலைகள் மற்றும்  பல்வேறு தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் திங்கள் தோறும் வாரச்சந்தைக்கு வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். வரும் திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், வாரம் தோறும் திங்கட்கிழமை செயல்படும் வாரச்சந்தை தீபாவளி பண்டிகை காரணமாக, ஒரு நாள் முன்னதாக ஞாயிற்றுக்கிழமை செயல்படும் என குத்தகைதாரர் துண்டு பிரசுரம் அடித்து பொதுமக்கள், வியாபாரிகளுக்கு விநியோகம் செய்துள்ளார். இதில் தமிழில் மட்டுமின்றி இந்தியிலும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கடும் கண்டனத்துக்கும், எதிர்ப்புக்கும் உள்ளாகி வருகிறது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இந்தி திணிப்பை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் கூட்டணியினர் இந்தி திணிப்பை எதிர்த்து அண்மையில் போராட்டங்களை நடத்தினர். இந்த நிலையில், குத்தகைதாரரின் இந்த செயல்பாடு பொதுமக்கள், அரசியல் கட்சியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: