உப்பூர் அனல் மின்நிலையத்தில் திறந்த வெளியில் கிடக்கும் தளவாட பொருட்கள்: பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் அமைக்கப்பட்டு வரும் அனல் மின் நிலைய கட்டுமான பணிக்காக ஏராளமான தளவாட பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மழை,வெயிலில் கிடப்பதால், பாதுகாப்பாக வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் தலா 800 மெகாவாட் மின் உலை கொண்ட 2 மின் உலைகள் 1,600 மெகாவாட் மின் உற்பத்திக்கான அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தை நடைமுறை படுத்துவதற்காக கடந்த அதிமுக ஆட்சியில் அப்பகுதியில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான 1000 ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. அப்ேபாது அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் மீனவர்கள்  கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இத்திட்டத்தால் விவசாயம், மற்றும் மீன்பிடி தொழில் பாதிக்கும் என கூறி பல கட்ட போராட்டங்களை நடத்தினர். மேலும் சிலர் நீதிமன்றம் வரை சென்றனர். இடை பட்ட காலத்தில் பசுமை தீர்ப்பாயம் அனல் மின் நிலையம் அமைப்பதற்கு தடை விதித்தது.

பின்னர் நீதிமன்றம் தடையை நீக்கியதால், போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருந்தது. அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத முந்தைய அதிமுக அரசு கடந்த 2014ம் ஆண்டு முதல் அனல் மின் நிலையத்திற்கான பணிகள் துவங்கின. இதனால் அனல் மின் நிலையம் அமைய உள்ள பகுதிக்கு, சென்னை, முப்பை, திருச்சி, பெங்களுரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெரிய கண்டெய்லர் லாரிகள் மூலமாக இரும்பு குழாய்கள் மற்றும் தளவாடங்கள் கொண்டு வந்து குவிக்கப்பட்டன.

தொடர்ந்து அனல் மின் நிலையத்திற்கு தேவையான தண்ணீரை கொண்டு வருவதற்காக கடலில் இருந்து பெரிய ராட்சத குழாய்கள் பொருத்தி அதன் மூலம் தண்ணீரை கொண்டு வந்து அனல்மின் நிலைய பணிக்கு பயன்படுத்தி விட்டு மறு சுழற்சி செய்யப்பட்டு, மீண்டும் கடலுக்குள் கொண்டு விடப்படும். இதற்காக ராட்சத பைப்புகள் அமைப்பதற்காக, கடலுக்குள் சுமார் 6 கி.மீ தூரம் வரை பாலம் அமைக்கும் பணி கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தன.

இதில் 3 கி.மீ தூரம் வரையிலும் பாலம் அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில், மீதி உள்ள தொலைவிற்கு கடலுக்குள் ராட்சத பில்லர் துாண்கள் அமைக்கப்பட்டு உள்ளது. பாலம் கட்டுமான பணி கிடப்பில் போடப்பட்டுள்ளன. 1600 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்காக அனல் மின் திட்டத்தின் வருவாயை விட, செலவினம் அதிகரிப்பு மற்றும் இந்திட்டம் அமைய உள்ள உப்பூருக்கு, ரயில் மூலம் நிலக்கரி உள்ளிட்ட எரிபொருட்கள் கொண்டு செல்வதில் உள்ளது. இப்படி பல்வேறு காரணங்களால், உப்பூரில் பல ஆண்டுகளாக இறக்கி வைக்கப்பட்டிருந்த கட்டுமான தளவாட பொருட்கள் கடந்த ஒரு சில மாதங்களாக உடன்குடி அனல் மின் நிலையத்திற்கு மாற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எஞ்சிய தளவாட பொருட்கள் மழையிலும் வெயிலிலும் திறந்த வெளியில் போட்டு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது மழை காலம் என்பதால் தளவாட பொருட்கள் திறந்த வெளியில் மழையில் நனைந்து விடுகிறது. இவ்வாறு மழையில் நனைந்து வருவதால் கட்டுமான தளவாட இரும்பு பொருட்கள் துருபிடிக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு துருப்பிடித்தால் அதனுடைய உறுதி தன்மை குறைந்து விடும். அதன் மூலம் அமைக்கப்படும் அனல் மின் நிலைய உலையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும் ஆகையால் தளவாட பொருட்களை மூடி பாதுகாக்க வேண்டும்.

மேலும் இந்த பகுதியில் வேறு எந்த விதமான தொழிற்சாலைகளோ, பெரிய நிறுவனங்களோ இல்லாத காரணத்தால் இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையை போக்கும் விதமாக அனல் மின் நிலைய பணியில் நிலம் வழங்கியவர்களுக்கும், அவர்களின் வாரிசுதாரர்களுக்கும், சுற்றுவட்டார இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: