6 வயது சிறுமி தவறி விழுந்து கால் முறிவு ஏற்பட்ட விவகாரத்தில் பள்ளி நிர்வாகமே முழுபொறுப்பேற்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: 6 வயது சிறுமி தவறி விழுந்து கால் முறிவு ஏற்பட்ட விவகாரத்தில் பள்ளி நிர்வாகமே முழுபொறுப்பேற்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அம்பத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 6 வயது சிறுமி தவறி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்கு அப்பள்ளி நிர்வாகமே முழு பொறுப்பேற்க வேண்டும். பள்ளியில் மாணவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. ஒன்றும் தெரியாத சிறு குழந்தைகளுக்கு இது போன்ற ஒரு நிலை ஏற்படுவது வேதனை அளிக்கிறது.

லட்சக்கணக்கில் கட்டணம் கேட்கும் கல்வி நிறுவனங்கள் ஏன் குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்போ ? உரிய வசதியோ ஏற்படுத்திக் கொடுப்பதில்லை. இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு நடத்தி மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு தேமுதிக சார்பில் ஆறுதல் தெரிவிப்பதாகவும், இனிவரும் காலங்களில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு கல்வி கொடுப்பது எவ்வளவு முக்கியமோ, அதே போன்று அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியதும் கல்வி நிறுவனங்களின் கடமை.

இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சிறுமியின் எதிர்காலம் பாதிக்காத வகையில் மாணவியின் மருத்துவ செலவுகளை பள்ளி நிர்வாகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: