ஆசிட் கலந்த குளிர்பானத்தை குடித்து சிறுவன் உயிரிழந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து கடும் தண்டனை வழங்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை; ஆசிட் கலந்த குளிர்பானத்தை குடித்து சிறுவன் உயிரிழந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கன்னியாகுமரி மாவட்டம் மெதுகும்மல் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன் அஸ்வின் அதங்கோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 6ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 24-ம் தேதி பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு நோக்கி வந்து கொண்டிருந்த சிறுவனிடம் பள்ளி சீருடையில் வந்த ஒருவர் குளிர்பானம் ஒன்றை கொடுத்து குடிக்க சொல்லி இருக்கிறார்.

இதையடுத்து அந்த குளிர்பானத்தை குடித்து விட்டு வீட்டிற்கு சென்ற சிறுவனுக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டதுடன், வாய், நாக்கு உள்ளிட்ட பகுதிகளில் புண்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுவனை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிறுவன் அஸ்வின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. சிறுவன் உயிரிழப்பு குறித்து பெற்றோர் அளித்த புகாரை காவல்துறையினரும், மாவட்ட ஆட்சியரும் அலட்சியமாக கையாண்டுள்ளதாகவும், இந்த வழக்கில் யாரையோ காப்பாற்ற காவல்துறை நினைப்பதாக சந்தேகம் இருந்துள்ளது.

தற்போது இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், சிறுவன் உயிரிழந்த வழக்கில், உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து கடும்  தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய நிதி வழங்க வேண்டும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: