தேவாலா அட்டி பகுதியில் வீடு, வாழை, பாக்கு பயிர்களை சூறையாடிய காட்டு யானை: பொதுமக்கள் அச்சம்

பந்தலூர்:  தேவாலா அட்டி பகுதியில் காட்டு யானைகள் வீட்டை உடைத்து சேதம் செய்ததால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர். பந்தலூர் அருகே தேவாலா சுற்றுவட்டார பகுதிகளான தேவாலா அட்டி, வாழவயல், சேலக்கட்டை, பாண்டியார் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியில் நுழைந்து சேதம் செய்வது, விவசாய பயிர்களை சேதம் செய்து வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் தேவாலா அட்டி சேலக்கட்டை குடியிருப்பு பகுதியில் நுழைந்த காட்டு யானை அப்பகுதியில் வசித்துவரும் கூலித்தொழிலாளி காளியம்மாள் என்பவரது வீட்டின் கதவு மற்றும் முன்பக்க சுவரை உடைத்து சேதம் செய்தது. வீட்டில் இருந்தவர்கள் பயத்தில் கூச்சலிட்டதால் காட்டு யானைகள் அங்கிருந்து நகர்ந்து சென்றது. வனத்துறையினர் காட்டு யானைகளை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேபோல பந்தலூர் அருகே நாயக்கன்சோலை பகுதியில் நேற்று காலை குடியிருப்புக்குள் புகுந்த ஒற்றை யானை வாழை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை சேதம் செய்தது. அப்போது அந்த வழியாக வந்த மக்கள் யானையை துரத்தியுள்ளது. இதனால் கிராம மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்து உயிர்தப்பினர். கோயில் மற்றும் பள்ளிக்கூடம் பகுதியில் முகாமிட்ட காட்டு யானையை பொதுமக்கள் சத்தமிட்டு விரட்டியடித்தனர்.

Related Stories: