மணலியில் பல்நோக்கு வணிக கட்டிடத்துக்கு அடிக்கல்

திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், 22வது வார்டுக்கு உட்பட்ட தேவராஜன் தெருவில் இரண்டு ரேஷன் கடைகள் ஒரே கட்டிடத்தில் இயங்கி வந்தன. இது மிகவும் பழமையான கட்டிடம் என்பதால் பழுதடைந்து மழைக்காலத்தில் மழைநீர் கசிந்து உணவு பொருட்கள் வீணானது. இதையடுத்து, ரேஷன் கடை இதே தெருவில் உள்ள சமுதாய கூடத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது. இந்நிலையில், சுமார் 3000 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் இந்த ரேஷன் கடைக்கு  புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று வார்டு கவுன்சிலர் தீர்த்தி கோரிக்கை விடுத்தார். இதையேற்று, திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.44 லட்சம் செலவில் 2 ரேஷன் கடைகளும் இயங்கும் வகையில் பல்நோக்கு வணிக வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி இந்த பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. கவுன்சிலர் தீர்த்தி தலைமை வகித்தார். கே.பி.சங்கர் எம்எல்ஏ கட்டுமான பணியை துவக்கி வைத்தார். மண்டல உதவி ஆணையர் கோவிந்தராஜ், செயற்பொறியாளர் காமராஜ், உதவி செயற்பொறியாளர் தேவேந்திரன், முன்னாள் கவுன்சிலர் கரிகால் சோழன், கிராம தலைவர் அருணாச்சலம் மற்றும் திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: