அரும்பாக்கத்தில் பரபரப்பு திடீரென தீப்பிடித்து எரிந்த கார்: தனியார் கம்பெனி நிர்வாகி உயிர் தப்பினார்

அண்ணாநகர்: சென்னையின் முக்கிய பகுதியாக விளங்குவது கோயம்பேடு. இந்த பகுதியை சுற்றிலும் மதுரவாயல், திருமங்கலம், அமைந்தகரை, அரும்பாக்கம், விருகம்பாக்கம் ஆகிய பகுதிகள் உள்ளன. கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம் செல்லும் சாலை காலை நேரத்தில் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் நேற்று காலை 8.30 மணி அளவில் சொகுசு கார் ஒன்று கோயம்பேடு மேம்பாலம் வழியாக அரும்பாக்கத்துக்கு சென்றுகொண்டிருந்தது. அப்போது காரில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. அவ்வழியாக பைக்கில் சென்றவர்கள், காரில் இருந்து கரும்புகை வருவதாக கூறியதால், அரும்பாக்கம் திருவீதியம்மன் கோயில் அருகில் காரை நடுவழியில் நிறுத்திவிட்டு, அதில் வந்தவர்கள் இறங்கி ஓட்டம் பிடித்தனர்.

சிறிது நேரத்தில் கார் தீப்பற்றி எரிய தொடங்கியது. தீ மளமளவென எரிந்ததால் இதை பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு அரும்பாக்கம் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். பின்னர், அண்ணாநகர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி காரில் பிடித்த தீயை அணைத்தனர். இதையடுத்து போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, சென்னை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த கதிரேசன் (47) என்பதும், நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் சிஇஓவாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. நேற்று காலை வேலைக்கு தனது சொகுசு காரில் சென்றபோது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காரில் இருந்து புகை வந்ததும் இறங்கி ஓடியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் காரில் எப்படி தீ பிடித்தது எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். சொகுசு கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அரும்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: