ஊட்டி அருகே மாவனல்லா, வாழைத்தோட்டம் பகுதிகளில் மக்களை துரத்தும் யானை: வாகன ஓட்டுனர்கள் அச்சம்

ஊட்டி: ஊட்டி அருகே வாழைத்தோட்டம் மற்றும் மாவனல்லா பகுதியில் செல்லும் பொதுமக்களை காட்டு யானை துரத்துவதால் அவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் யானைகள், சிறுத்தை, கரடி, காட்டு மாடுகள் போன்றவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இவைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி மக்கள் வாழும் பகுதிகளுக்குள் வருவதால் அடிக்கடி மனித- விலங்கு மோதல் ஏற்படுகிறது. குறிப்பாக, காட்டு யானைகள் உணவுதேடி மக்கள் வாழும் பகுதிகளுக்குள் வருகின்றன.

இதுபோன்று யானைகள் வரும்போது, அவைகளால் தாக்கப்பட்டு கூலித் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் உயிரிழந்து வருகின்றனர். கடந்த இரு நாட்களுக்கு முன் ஊட்டி அருகேயுள்ள மசினகுடி பகுதியில் காட்டு யானை தாக்கி ஆடு மேய்க்க சென்று முதியவர் உயிரிழந்தார். இந்நிலையில், இந்த காட்டு யானை தற்போது மசினகுடி அருகேயுள்ள மாவனல்லா, வாழைத்தோட்டம் போன்ற பகுதிகளில் மக்கள் வாழும் பகுதிகள் மற்றும் சாலைகளில் வலம் வருகிறது. சாலைகளில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை விரட்டுகிறது. இதனால், மீண்டும் இந்த யானை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால், இப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும், இரவு நேரங்களில் மக்கள் ெவளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வாழைத்தோட்டம் மற்றும் மாவனல்லா பகுதியில் வலம்வரும் காட்டு யானையை மக்கள் வாழும் பகுதிகளில் இருந்து காட்டிற்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: