கட்டுப்பாடுகளை கடைபிடித்து பட்டாசு வெடிக்க வேண்டும்: ஆவடி காவல் ஆணையர் வலியுறுத்தல்

ஆவடி: ஆவடி காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவடி காவல் ஆணையரக பகுதிகளில் வசிக்கும் மக்கள், உச்சநீதிமன்றத்தின் அறிவுரைபடியும், தமிழக அரசின் வழிகாட்டுதல்படியும்  வரும் 24ம் தேதி தீபாவளி பண்டிகையின்போது காலை 6 மணி முதல் 7 மணிவரையும், இரவு 7 மணி முதல் 8 மணிவரையும் பட்டாசுகள் வெடிக்க வேண்டும். மேலும், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு விதி 89ன்படி, பட்டாசு வெடிக்கும் இடத்தில் இருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது.

தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ, பயன்படுத்துவதோ, வெடிப்பதோ தவிர்க்கப்பட வேண்டும். எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ள இடத்தில் பட்டாசு வெடிக்காதீர்கள். இருசக்கர, மூன்று சக்கர, 4 சக்கர வாகனங்கள் நின்றிருக்கும் இடங்களுக்கு அருகே, பெட்ரோல் பங்க் அருகே பட்டாசுகள் வெடிக்கக்கூடாது.

பட்டாசுகளை கொளுத்தி மேலே தூக்கி எறிந்துவிட்டு வேடிக்கை பார்த்தால், உயரே வெடிக்கும் பட்டாசு அவர்கள்மீதே விழுந்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும். அதேபோல் பட்டாசுகளை கொளுத்தி, தூக்கியெறிந்து விளையாடக்கூடாது. மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கவனக்குறைவாக பட்டாசு வெடிக்காதீர்.

மூடிவைத்த தகரடப்பாவுக்குள் பட்டாசுகளை கொளுத்தினால், அவை வெடிக்கும்போது பல்வேறு தீ விபத்துகள் நிகழும். அவற்றை செய்யக்கூடாது. குடிசை பகுதி மற்றும் மாடி கட்டிடங்களில் ராக்கெட் போன்ற வெடிகளை வெடிக்கக்கூடாது. எரியும் விளக்கு அருகே பட்டாசுகளை வைக்கக்கூடாது. ஈரமான பட்டாசுகளை சமையலறையில் உலர்த்தக்கூடாது. பெரியவர்களின் துணையின்றி, குழந்தைகள் பட்டாசு வெடிக்க அனுமதிக்காதீர். கூரை வீடுகள் மற்றும் குடிசை பகுதிகளில் சரவெடிகள் உள்ளிட்ட பல்வேறு பட்டாசு வகைகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

பட்டாசு விற்கும் கடைகளின் அருகே புகைபிடிப்பதோ, எரியும் சிகரெட் துண்டை அணைக்காமல் வீசியெறியக்கூடாது. கால்நடைகள் அருகே பட்டாசு வெடித்தால், அவை பயத்தில் தெறித்து ஓடும்போது பல்வேறு விபத்துகள் நேரிடலாம். தீ விபத்து அல்லது பட்டாசுகளினால் ஏதேனும் விபத்து நேர்ந்தால், தீயணைப்பு படையின் உதவி எண் 101 மற்றும் அவசர மருத்துவ உதவிக்கு 108 ஆம்புலன்ஸ் சேவையை அழைக்கவும். இதன்மூலம் அசம்பாவிதங்களை தவிர்த்து மனித உயிர்களை காப்பாற்றி, தீபாவளி பண்டிகையை இனிதே கொண்டாட பொதுமக்களிடம் அறிவுறுத்துகிறோம். இவ்வாறு ஆவடி காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் தெரிவித்தார்.

Related Stories: