போதுமான அளவு உரம் இருப்பு உள்ளது உரக்கடைகளில் முறைகேடு கண்டறியப்பட்டால் உரிமம் ரத்து-திருப்பூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எச்சரிக்கை

உடுமலை : நடப்பு சம்பா பருவத்தில் பிரதான பயிர்களான நெல், கரும்பு, மக்காச்சோளம், உளுந்து மற்றும் தென்னை போன்றவற்றுக்கு தேவைப்படும் முக்கிய இடுபொருட்களான விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளின் இருப்பு மற்றும் விற்பனையை ஆய்வு செய்யும் வகையில், திருப்பூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் (பொறுப்பு) சின்னச்சாமி தலைமையில், வேளாண் துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து மாவட்டத்தில் பல்வேறு உரக்கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.ஆய்வின்போது, யூரியா, டிஏபி மற்றும் பொட்டாஷ் உரங்கள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து வேளாண் இணை இயக்குநர் சின்னச்சாமி கூறியதாவது: மடத்துக்குளம், உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தை சேர்ந்த தனியார் உரக்கடைகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் மொத்தம் 493 டன் யூரியா, 256 டன் டிஏபி, 222 டன் பொட்டாஷ் ஆகியவை இருப்பில் உள்ளன.

உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனையாளர்கள் தங்களின் உர விற்பனைக்கான புதிய உரிமம் பெறுதல் மற்றும் புதுப்பித்தல்களை காலதாமதமின்றி முடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விவசாயிகளுக்கு ஆதார் எண் பதிவு அடிப்படையிலேயே உரம் மற்றும் இதர வேளாண் இடுபொருட்கள் வழங்கப்பட வேண்டும். கட்டாயம் ரசீது வழங்க வேண்டும். விற்பனை உரிமம், விலை விவரங்களை அனைவரும் காணும்படி பார்வைக்கு வைக்க வேண்டும்.

அனுமதி பெறாத நிறுவனங்களில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை கொள்முதல் செய்யவோ விற்பனை செய்யவோ கூடாது. குறிப்பிட்ட உரத்தை இருப்பு வைத்துக்கொண்டே இல்லை என கூறக்கூடாது. ஒரு உரம் வாங்கினால்தான் மற்றொரு உரம் தருவோம் என வற்புறுத்தக்கூடாது. அவ்வாறு புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மொத்த விற்பனையாளர்கள் உரங்களை வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்யவோ மாற்றம் செய்யவோ கூடாது. சில்லறை விற்பனையாளர்களுக்கு உரங்களை அளிக்கும்போது முறையான ஆவணங்களை கொடுத்து அனுப்ப வேண்டும். மீறினால் அத்தகைய உரங்களை விற்பனை செய்ய சில்லறை வியாபாரிகளுக்கு தடை விதிக்கப்படும்.

விவசாயிகள் ரசீதை கேட்டுபெற வேண்டும். தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிருக்கு தேவையான பரிந்துரைக்கப்பட்ட உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மேலும், உரம் விற்பனை செய்வோர் அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தல், விவசாயி அல்லாத நபர்களுக்கு உரங்களை விற்பனை செய்தல், விவசாயிகளுக்கு சரியான பட்டியல் வழங்காமல் இருத்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபடுவது தெரியவந்தால், விவசாயிகள் தங்களது வட்டார வேளாண்மை அலுவலர் அல்லது வேளாண் உதவி இயக்குநர் ஆகியோரிடம் புகார் அளிக்கலாம்.

அவ்வாறு முறைகேடுகள் கண்டறியும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட உர வியாபாரிகளின் உரிமம் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-ன்படி ரத்து செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: